கொரோனோவுக்கு முன் பிரபல சுற்றுலா வழிகாட்டியாக இருந்த மதுரை நாகேந்திர பிரபு, இப்போது தீவிர விவசாயியாக விளைநிலத்தில் களமாடி வருகிறார். உலக அளவில் ட்ரெண்டான இந்த உத்வேக மனிதரின் இந்த மாற்றத்துக்குப் பின்னால் நம் அனைவரின் கவனத்துக்கும் உரிய சில விஷயங்கள் இருக்கவே செய்கின்றன.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கீழ் நாச்சிகுளம் கிராமத்தை பூர்விகமாகக் கொண்டவர் நாகேந்திர பிரபு. கடந்த 16 ஆண்டுகளாக தமிழக கலாசாரத்தை வெளிநாட்டினருக்கு எடுத்துரைக்கும் நோக்கில் வெளிநாடு மற்றும் வெளிமாநில சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டும் கைடு (வழிகாட்டி) ஆக பணியாற்றி வந்தார்.
தமிழக அளவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வரக்கூடிய முக்கிய தளமாக விளங்கும் மதுரையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் சுற்றுலா தலங்களின் சிறப்புகளை எடுத்துரைப்பதில் வழிகாட்டியின் பங்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
செய்யும் பணியினை நேசித்து முழுமையாக செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த நாகேந்திர பிரபு தமிழகத்தையும், தமிழகத்தின் பாரம்பரியம், கலாசாரம், நாகரிகத்தை தெரிந்து கொள்ள வரும் வெளிநாட்டவர்களுக்கும் வெளி மாநிலத்தவர்ளுக்கு மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் கட்டட கலைகளையும், ஓவியங்களையும், அதன் வரலாற்றையும் விரிவாக விளக்குவதுடன், அவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் நடனம், முக பாவனைகள் மூலமாகவும் தமிழர்களின் பாரம்பரிய கலையான பரதநாட்டியம் மூலமாக எடுத்துரைத்து வெளிநாட்டவர்களின் கவனத்தை ஈர்த்தவர் இவர்.
திருமலைநாயக்கர் மஹாலில் உள்ள கலைநயமிக்க கட்டட கலைகளை தத்ரூபமாக எடுத்துரைபதில் வல்லவராக திகழ்ந்த நாகேந்திர பிரபு , சுற்றுலா தலங்கள் குறித்து விளக்குவதோடு மட்டுமல்லாமல், தமிழர்களின் பாரம்பரிய நடனக் கலையான பரதநாட்டிய கலை குறித்தும், பரத நாட்டிய நடனம் மூலம் ஏற்படும் உடல் மற்றும் மன நலன் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தி அசத்தி வந்தார்.
இவரது வீடியோ ஒன்று, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகம் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் ட்ரெண்ட் ஆனதால் பிரபலமான இவர், இப்பொழுது என்ன செய்கிறார் தெரியுமா?
கொரோனோ பாதிப்பின் காரணமாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை முற்றிலும் குறைந்து போனதால் வேலைவாய்ப்பை இழந்து தனது சொந்த ஊரில் உள்ள விவசாய நிலத்தில் தற்பொழுது விவசாயம் மேற்கொண்டு வருகிறார் நாகேந்திர பிரபு.
மொத்தம் 10 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ள நிலையில், தற்பொழுது சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் உள்ள விவசாய நிலத்தில் நெல் சாகுபடி செய்து தனது வாழ்வாதாரத்தை பூர்த்தி செய்து வருகிறார் இவர்.
கொரோனோ காலத்தில் கடும் சிரமத்தை எதிர்கொள்ள முடியாமல் தவித்த நிலையில், தனது பூர்விக நிலத்தை நம்பி விவசாயத்தை மேற்கொள்ள திட்டமிட்டு, தற்பொழுது வெற்றிகரமாக விவசாய பணியை செவ்வனே செய்து அசத்தி வருகிறார்.
துவக்கத்தில் விவசாயம் செய்ய பொருளாதார பிரசனை இருந்ததாக கூறும் நாகேந்திர பிரபு, தனது மனைவியின் நகையை வங்கியில் அடகு வைத்து, அதன் மூலம் கிடைத்த கடன் தொகையை வைத்து விவசாயத்தை துவக்கியதாகவும் கூறுகிறார்.
"சுற்றுலா வழிகாட்டியாக இருந்தபோது கிடைத்த வருவாயைவிட தற்பொழுது குறைந்த அளவு வருமானம் கிடைத்தாலும், சொந்த ஊரில் சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வருவதை எண்ணி மனம் ஆறுதலடைகிறது. பெருமையாகவும் உள்ளது.
இப்போது, இரண்டாம் அலை கொரோனோ பாதிப்பு ஏற்படுவதாக கூறுகிறார்கள். மீண்டும் சுற்றுலா வழிகாட்டி தொழில் மீண்டு எழுமா என்பதில் சந்தேகம் உள்ளது. எனவே, விவசாயத்தை விடா முயற்சியோடு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன். தற்பொழுது நெல் நடவு பணிகள் நிறைவு பெற்றுள்ளது. நல்ல விளைச்சல் கிடைத்து, உழைத்து உழைப்பிற்கு ஏற்ற கூலி கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்று உத்வேகத்துடன் சொல்கிறார் நாகேந்திர பிரபு.
இவர்போலவே பலரும் பலரும் தங்களது தொழிலை மாற்றியுள்ள நிலையில், அதில் எந்த அளவுக்கு முழு ஈடுபாட்டுடன் இயங்க முடிகிறது என்பதும், பொருளாதார முன்னேற்றம் நிறைவாக இருக்கிறது என்பதும் இன்னமும் கேள்விக்குறியாகவெ இருக்கிறது.
- ஜி.கணேஷ்குமார்