புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் தொடர் மழையினால் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நெல் பயிர்கள் நீரில்மூழ்கியுள்ளன. சம்மந்தப்பட்ட நெல் வயல்களை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் ஆலங்குடி தாலுகாவிற்கு உட்பட்ட வெண்ணவால்குடி, ஆலங்காடு, சூரன் விடுதி, வெள்ளாகுளம் உள்ளிட்ட கிராமங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஒருசில கண்மாய்கள் நிரம்பி உள்ளதோடு கண்மாய்களுக்கு தண்ணீர் வரத்தும் அதிகமாக உள்ளதால், விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி நாசமானது.இதனால் இந்த ஆண்டு நல்ல விளைச்சல் இருந்தும் கதிர் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.மேலும் வயல்களில் தேங்கியுள்ள மழைநீர் வடிய வழியின்றி தொடர்ந்து மழை பெய்து வருவதால் எஞ்சியுள்ள நெற்பயிற்களை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
இதனால் விவசாயிகள் பெரும் கவலையடைந்துள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட வேளாண்துறை அதிகாரிகள், அனைத்து வருவாய் கிராமங்களிலும் உள்ள விவசாய நிலங்களை நேரில் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.