விவசாயம்

விவசாயிகள் மன உளைச்சல் - தரமற்ற நெல்விதைகளை வழங்கிய நிறுவனத்துக்கு நீதிமன்றம் அபராதம்

விவசாயிகள் மன உளைச்சல் - தரமற்ற நெல்விதைகளை வழங்கிய நிறுவனத்துக்கு நீதிமன்றம் அபராதம்

Sinekadhara

நெல்லை மாவட்டம் குன்னத்தூர் பகுதியில் விவசாயிகளுக்கு தரமற்ற நெல் விதைகளை வழங்கிய நிறுவனமும், விற்பனை செய்த கடையும் சேர்ந்து பாதிக்கப்பட்ட 3 விவசாயிகளுக்கு ரூ.1,90,000 இழப்பீடு தர நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த ஒரு செய்தித்தொகுப்பை பார்க்கலாம்.

திருநெல்வேலி மாவட்டம் கீழகுன்னத்தூரை சேர்ந்த விவசாயி முருகன், ஆறுமுகவேல் மற்றும் ரவி ஆகியோர் விவசாயம் செய்வதற்கு நெல் விதை வாங்கி உள்ளார்கள். நெல் விதை தரமற்ற விதையாக இருந்ததால் நெல் விளைச்சல் மேனி போகாமல் நஷ்டம் ஏற்பட்டு விட்டது. நெல் நெட்டையும் குட்டையுமாக பயிர்கள் வளர்ந்துள்ளது. இதனால் மிகுந்த மனஉளைச்சல் மற்றும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தரமற்ற நெல் விதையை விற்பனை செய்த கடை மீதும் விற்பனை நிறுவனத்தின் மீதும் மேற்படி நபர்கள் நுகர்வோர் நீதிமன்றம் திருநெல்வேலியில் வழக்கறிஞர் பிரம்மா மூலம் வழக்கு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கினை விசாரணை செய்த நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி கிளாடஸ்டோன் பிளஸ்ட் தாகூர் மற்றும் உறுப்பினர் சபாபதி ஆகியோர் தரமற்ற நெல் விற்பனை செய்த நிறுவனமும் விற்பனை செய்த கடையும் சேர்ந்து விவசாயிகளுக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்கும் மனஉளைச்சலுக்கும் 80,000 ரூபாய், 70,000 ரூபாய் மற்றும் 40,000 ரூபாய் என மொத்தம் ₹1,90,000 /- மூவருக்கும் சேர்த்து வழங்க வேண்டும் என்றும், மேலும் ஒவ்வொருவர் வழக்கிற்கும் தலா ரூபாய் 5000 /-விகிதம் 15,000 வழக்குச் செலவு வழங்க வேண்டும் என்றும், ஒரு மாத காலத்திற்குள் வழங்கவில்லை என்றால் 9% வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.