மதுரை மாவட்டம் மேலூர் அருகே 20 நாட்களுக்கு மேலாக நெல் கொள்முதல் நடக்காததால் மழையில் நனைந்து நெல் மணிகள் முளைத்து வருவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள செட்டியார்பட்டியில் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நெல்கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டது. அங்கு கடந்த 20 நாட்களுக்கும் மேலாக நெல் கொள்முதல் நிலையம் செயல்படாததால் விவசாயிகள் கொண்டுவந்த 4 ஆயிரம் சிப்பத்துக்கும் மேலான நெல் மணிகள் தேக்கமடைந்துள்ளன.
தற்போது மேலூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பெய்துவரும் மழையால் நெல் மணிகள் முளைக்கத் தொடங்கிவிட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கிறார்கள். இதுதொடர்பாக கொள்முதல் நிலைய அலுவலர் நந்தினியிடம் கேட்டபோது, விவசாயிகளிடம் போதிய அளவு கொள்முதல் செய்யப்பட்டு விட்டதாகவும், தற்போது அறுவடை செய்யப்பட்டுள்ள நெல்லை கொள்முதல் செய்ய மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.