அரூர் அருகே தங்களது சொந்த நிலத்தில் நெல் பயிர்களை நடவு செய்த சிறுவர்களின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த நம்பிப்பட்டியைச் சேர்ந்தவர் வெங்கட்ராமன். விவசாயியான இவர், தனது சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் தருமபுரி மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான விவசாயிகள் தங்களது விவசாய நிலத்தில் நெல் பயிர் நடுவதற்கான உழவுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
விவசாயி வெங்கட்ராமனும் தனது விவசாய நிலத்தில் நெல் நடவு செய்வதற்கு தயாராகியுள்ளார். சிறிய வயல் என்பதால் கூலி ஆட்கள் இல்லாமல் தனது மனைவி, தாய் உள்ளிட்ட உறவினர்களைக் கொண்டு நெல் பயிர் நடவு செய்வதற்கு திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் வெங்கட்ராமனின் மகள் வெற்றிகனி மற்றும் மகன் இளமாறன் ஆகிய இருவருக்கும் பள்ளி விடுமுறை என்பதால், அவர்கள் இருவரும் ஆர்வத்துடன் சேற்றில் இறங்கி நெற்பயிர்களை நடவு செய்துள்ளனர். அந்தக் காட்சிகளே தற்போது பலரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.
பள்ளி விடுமுறையில் மொபைலில் விளையாடுவது, தேவையற்ற விஷயங்களில் நேரம் செலவிடுவது என்றில்லாமல், தங்களது விவசாய நிலத்தில் இறங்கி பெற்றோருக்கு உதவியாக நெல் நாற்று நடவு செய்த சிறுவர்களின் செயல், அப்பகுதி மக்களால் பாராட்டப்பட்டு வருகிறது.