ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெறுவது குறித்து பரிசீலிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டதற்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் நன்றி பாராட்டும் விழா திருவாரூர் மாவட்டம் வன்மீகபுரத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அமைச்சர்கள் காமராஜ், துரைக்கண்ணு, எஸ்பி வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
விழாவில் முதலமைச்சருக்கு 'காவிரி காப்பாளன்' என்ற பட்டத்தை விவசாயிகள் வழங்கினர். மேலும், தங்கமுலாம் பூசிய கலப்பை, திருவாரூர் ஆழித்தேர் உள்ளிட்ட நினைவுப்பரிசுகளை முதல்வருக்கு விவசாயிகள் அளித்தனர். முன்னதாக விழாவில் உரையாற்றிய முதலமைச்சர், விவசாயிகள் நலனுக்கு நிறைவேற்றப்படும் திட்டங்களைப் பட்டியலிட்டார்.
மேலும், பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாக்கும் விதமாக, நெல் ஜெயராமனின் பெயரில் நீடாமங்கலத்தில் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம் அமைக்கப்படும் என்றும் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். மேலும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெறுவது குறித்து பரிசீலிக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.