நாடாளுமன்றத்தில் இன்று மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்த 2021 - 22 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் வேளாண் சார்ந்த 9 அறிவிப்புகள் பற்றிய விபரங்கள் சற்றே விரிவாக...
“கடனின் அளவு ரூ.16.5 லட்சம் கோடிக்கு அதிகரிப்பு: விவசாயிகளுக்கு போதிய அளவு வேளாண் கடன் வழங்கும் வகையில், நடப்பு நிதியாண்டில் ரூ.16.5 லட்சம் கோடி அளவுக்கு கடன் வழங்கும் அளவு அதிகரிக்கப்படுகிறது. மேலும் கால்நடை வளர்ப்பு, பால் உற்பத்தி மற்றும் மீன் வளர்ப்பு போன்ற வேளாண் சார்ந்த துறைகளுக்கும் இத்தகைய கடனை வழங்க அரசு கவனம் செலுத்தி வருகிறது.
ஊரக கட்டமைப்பு வளர்ச்சிக்கான நிதி 33% அதிகரிப்பு: ஊரக வளர்ச்சி மேம்பாட்டு நிதி ரூ.30,000 கோடியிலிருந்து ரூ.40,000 கோடியாக அதிகரிக்கப்படுகிறது.
நுண்பாசனத் திட்ட நிதி இரு மடங்காக அதிகரிப்பு: வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கியின் (நபார்டு) கீழ் செயல்படுத்தப்படும் நுண்பாசனத் திட்டத்திற்கான நிதி தற்போது ரூ.5,000 கோடி அளவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக ரூ.5,000 கோடி ஒதுக்கப்படுகிறது.
இ-நாம் திட்டத்தின் கீழ் 1000 மண்டிகள் இணைக்கப்படும்: இ-நாம் திட்டத்தின் கீழ் 1.68 கோடி விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். ரூ.1.14 லட்சம் கோடி அளவுக்கு இந்த இ-நாம் மூலம் வணிகம் நடைபெறுகிறது. இந்தத் திட்டம் வெளிப்படையாகவும், போட்டித்தன்மையுடனும் இருக்க 1000 மண்டிகள் இ-நாம்-வுடன் இணைக்கப்படுகிறது.
5 முக்கிய மீன்பிடி துறைமுகங்கள் மேம்படுத்தப்படும்: மீன்பிடி துறைமுகங்கள் மற்றும் மையங்களை நவீன அளவில் மேம்படுத்த போதிய முதலீடுகள் செய்யப்படும். 5 பெரிய மீன்பிடி துறைமுகங்கள் மேம்படுத்தப்படும். குறிப்பாக சென்னை, கொச்சி, விசாகப்பட்டினம், பாரதீப் மற்றும் பெட்டாகட் ஆகிய துறைமுகங்கள் மேம்படுத்தப்பட்டு பொருளாதார நடவடிக்கைகளுக்கான மையங்களாக உருமாற்றப்படும். ஆறுகள், குளங்கள் மற்றும் நீர்நிலைகள் மூலம் உள்நாட்டு மீன்பிடி துறைமுகங்கள் மற்றும் மையங்கள் மேம்படுத்தப்படும்.
தமிழகத்தில் பல்வகை பயன்பாட்டுக்கான கடற்பாசி பூங்கா அமைக்கப்படும்: கடற்பாசியின் மதிப்பை அங்கீகரிக்கும் வகையிலும், கடலோரவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும், வளர்ந்து வரும் துறையாக கடற்பாசி வளர்ப்பு திகழ்கிறது. அந்த வகையில், கடற்பாசி வளர்ப்பை மேம்படுத்தும் வகையில் தமிழகத்தில் பல்வகை பயன்பாட்டுக்கான கடற்பாசி பூங்கா அமைக்கப்படும். இதன் மூலம் பெரிய அளவில் வேலைவாய்ப்பு உருவாகுவதோடு கூடுதல் வருவாயை ஏற்படுத்தும்.
கடந்த ஆண்டுகளில், விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பதே இந்த அரசின் முக்கிய நோக்கமாக இருந்துள்ளது. இந்த நோக்கம் தொடரும். அரிசி, கோதுமை, பயிர் வகைகள் போன்றவற்றின் உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக விவசாயிகளுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஆதார விலை உற்பத்திச் செலவை விட ஒன்றரை மடங்கு அதிகரிக்கப்பட்டிருக்கிறது" என்றார் அமைச்சார் நிர்மலா சீதாராமன்.