விவசாயம்

பாரத் பந்த்: விவசாயிகளுக்கு ஆதரவாக முசிறி, பாம்பனில் போராட்டம்!

kaleelrahman

மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம், சாலைமறியல், கடையடைப்பு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய மூன்று புதிய வேளாண் சட்டங்களும் விவசாயிகளை பாதிக்கும் என்று தலைநகர் டெல்லியில் கடந்த 13 நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையடுத்து மத்திய அரசு விவசாயிகளை அழைத்து பேசியது. இதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதனால் நாளை மீண்டும் மத்திய அரசுடன் விவசாயிகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.


இந்நிலையில் போராட்டத்தை தீவிரம் படுத்தும் விதமாக இன்று நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர். இதனால் தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெறுவதோடு பல இடங்களில் கடைகளையும் அடைத்து டெல்லி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், திருச்சி மாவட்டம் முசிறி கைகாட்டியில் திமுக ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் நல்லுசாமி, காங்கிரஸ் வட்டாரத் தலைவர் சுரேஷ், தமிழ் மாநில காங்கிரஸ் வட்டார தலைவர் நரேந்திரன் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


மறியலில் ஈடுபட்டவர்களில் 58 பேரை முசிறி போலீசார் கைது செய்து முசிறி தா.பேட்டை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்துள்ளனர். இதேபோல் தொட்டியம் வானபட்டறை மைதானத்தில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் 35 பேரும், தா.பேட்டை கடை வீதியில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 36 பேரும் கைது செய்யப்பட்டனர்.

பாம்பன் தெற்கு கடற்கரை பகுதியில் பாரம்பரிய விசைப்படகு மீனவர்கள் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் வேளாண்மை சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், 2020 மீன்பிடி சட்டத்தை திரும்ப பெறவழியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்பாட்டத்தில் பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.