விவசாயம்

8 மாதமாக வழங்கப்படாத பயிர்காப்பீட்டு தொகை: விவசாயிகளுக்கு நேர்ந்த அவலம்

8 மாதமாக வழங்கப்படாத பயிர்காப்பீட்டு தொகை: விவசாயிகளுக்கு நேர்ந்த அவலம்

webteam

கடந்த 8 மாதங்களாக வறட்சி நிவாரணம் வழங்கப்படவில்லை என்று விருதுநகர் விவசாயிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு வறட்சி பாதிப்பு ஏற்பட்டு விவசாயங்கள் முற்றிலும் முடங்கின. பயிர்கள் வாடியதாலும், கடனை திரும்பி செலுத்த இயலாமலும் விவசாயிகள் சிலர் தற்கொலை செய்துகொண்டனர். இதையடுத்து பாதிப்படைந்த விவசாயிகளுக்கு நிவாரணமும், பயீர்காப்பீட்டுத்தொகையும் வழங்கப்படும் என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் நிவாரணம் சில இடங்களில் வழங்கப்பட்டாலும் முறையாக வழங்கப்படவில்லை என்றும், பயிர்காப்பீட்டு தொகைகள் வழங்கப்படவில்லை என்றும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 8 மாதங்களாக பயிர்காப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை என பாதிப்படைந்த விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து கூறும் அப்பகுதி விவசாயிகள், “வடகிழக்கு பருவமழையை நம்பி சுமார் 4 லட்சம் ஏக்கரில் நெல், கரும்பு, வாழை, பருத்தி, மக்காசோளம், கம்பு, குதிரைவாலி உள்ளிட்ட 18 வகையான பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டன. ஆனால் வழக்கத்தை விட 60 சதவிகிதம் மழை குறைவு என்ற நிலையில் முழுமையாக வறட்சி பாதித்த மாவட்டங்களில் ஒன்றாக விருதுநகர் அறிவிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வ‌றட்சி நிவாரணத்தொகை வழங்கப்பட்டாலும், பயிர் காப்பீட்டுத் தொகை கைக்கு வரவில்லை” என்று கூறுகின்றனர். இதனால் பொருளாதார சுமை இரட்டிப்பாகி வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.