விவசாயம்

‘400 ஏக்கர் பயிர்களும் கருகிவிடும்’- தண்ணீருக்காக கண்ணீருடன் காத்திருக்கும் விவசாயிகள்

‘400 ஏக்கர் பயிர்களும் கருகிவிடும்’- தண்ணீருக்காக கண்ணீருடன் காத்திருக்கும் விவசாயிகள்

sharpana

நெல்லை மாவட்டம் அருகன்குளம் கிராமத்தில் பாசன குளத்திற்கு நீர் வரத்து நிறுத்தப்பட்டதால் 400 ஏக்கரில் விளைந்த நெற்பயிர்கள் கருகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில் பாபநாசம் மணிமுத்தாறு போன்ற பிரதான அணைகள் மூலம் இருபோக சாகுபடி நடைபெற்று வருகிறது. தென்மேற்கு பருவமழை காலத்தில் கார் சாகுபடியும், வடகிழக்கு பருவமழை காலத்தில் பிசான சாகுபடியும் நடைபெறும். நெல்லை மாவட்டம் தாழையூத்து அடுத்த அருகன்குளம் பகுதியில் சுமார் 400 ஏக்கர் விவசாய நிலத்தில் கடந்த டிசம்பர் மாதம் பிசான சாகுபடிக்கு தாமதமாக நெல் பயிரிட்டுள்ளனர்.

நெல்லை மாவட்டம் பாபநாசம் அணையின் 7 கால்வாய்களில் ஒன்றான நெல்லை கால்வாய் மூலம் அருகன்குளம் பாசன குளத்திற்கு தண்ணீர் வருகிறது. 120 நாட்கள் பயிரான நெற்பயிர் தற்போது 100 நாட்களை கடந்துள்ளது. கடந்தாண்டு இறுதியில் பிசான சாகுபடியை தாமதமாகத் தொடங்கியதால் இந்த ஆண்டில் மார்ச் மாத இறுதி வரை பயிருக்கு தண்ணீர் தேவை உள்ளது.


இந்நிலையில் கடந்த 10 நாட்கள் முன்பாகவே நெல்லை கால்வாயின் மடைகளை அடைத்து விட்டார்கள். இதனால், தண்ணீர் வரத்து இன்றி பாசன குளம் வறண்டு கிடக்கிறது. ”தண்ணீரை எதிர்பார்த்து அருகன்குளம் பகுதியில் 400 ஏக்கர் விவசாய நிலங்களில் நெற்பயிர்கள் கருகி வருகிறது. குறைந்தது இன்னும் பத்து நாட்களுக்காவது தண்ணீர் திறந்துவிட்டால் மீதம் உள்ள நெற்பயிரை காப்பாற்ற வாய்ப்பு இருக்கும்” என்று விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்