விவசாயம்

திடீரென பெய்த மழையில் நனைந்த 2000 நெல் மூட்டைகள்: வேதனையில் செஞ்சி விவசாயிகள்

திடீரென பெய்த மழையில் நனைந்த 2000 நெல் மூட்டைகள்: வேதனையில் செஞ்சி விவசாயிகள்

kaleelrahman

செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் சுமார் இரண்டாயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

செஞ்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியான மேல்மலையனூர் அனந்தபுரம் ஆலம்பூண்டி மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி, சேத்பட், தீவனூர் ஆகிய பகுதிகளில் இருந்து நெல் மூட்டைகளை கொண்டுவருவது வழக்கம்.

இந்நிலையில், நேற்றிரவு செஞ்சி ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு 4000 நெல்மூட்டைகள் வந்திருந்த நிலையில் 2000 முட்டைகள் மட்டுமே பாதுகாப்பாக கட்டட தளத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே வியாபாரிகளின் மூட்டைகள் குடோனில் இருந்ததால் விவசாயிகளின் மூட்டைகளை திறந்தவெளியில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று காலை பெய்த திடீர் மழையால் திறந்த வெளியில் வைக்கப்பட்டிருந்த அனைத்து மூட்டைகளும் நனைந்து சேதமடைந்தன. பிறகு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இருந்து தார்ப்பாய் மூலமாக நெல் மூட்டைகள் மூடப்பட்டன. இருப்பினும் 500க்கு மேற்பட்ட மூட்டைகள் முழுவதுமாக நனைந்தன.

வியாபாரிகளின் நெல் மூட்டைகள் தொடர்ந்து ஒழுங்குமுறை விற்பனைக்கூட கிடங்குகளை ஆக்கிரமித்து இருப்பதால், விவசாயிகளின் நெல் மூட்டைகள் நனைவது தொடர் கதையாக உள்ளது விரைவில் இதற்கு முறையான தீர்வு காண வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக இருக்கிறது.