விவசாயம்

பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.19,500 கோடியை விடுவித்தார் பிரதமர் மோடி

பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.19,500 கோடியை விடுவித்தார் பிரதமர் மோடி

PT WEB

பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2000 அளிக்கும் திட்டத்தின் கீழ் 9வது தவணை நிதியை விடுவித்தார் பிரதமர் மோடி.

'பிரதமரின் கிசான் சம்மான் நிதி' திட்டத்தின் கீழான நிதியுதவியின் 9வது தவணைத் தொகையை காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி அளித்தார். இந்நிகழ்ச்சியின் போது, விவசாய பயனாளிகளிடம் பிரதமர் கலந்துரையாடினார். இதன் மூலம் 9.75 கோடிக்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்களுக்கு, ரூ.19,500 கோடிக்கும் மேற்பட்ட தொகை பரிமாற்றம் செய்யப்பட்டது. பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ், இது 9வது தவணை நிதியுதவி ஆகும்.

இந்நிகழ்ச்சியில், பயனாளிகள் இடையே விதைப்பு காலம் பற்றி பேசிய பிரதமர், ''இன்று பெறப்பட்ட தொகை விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்'' என நம்பிக்கை தெரிவித்தார். ரூ.1 லட்சம் கோடி தொகுப்பிலான கிசான் உள்கட்டமைப்பு நிதி திட்டம், இன்று ஓராண்டை நிறைவு செய்கிறது. இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தை கூட்டமைப்பு கடைகளில் தேன் மற்றும் குங்குமப் பூ விற்பனை திட்டம் குறித்து பேசிய பிரதமர் மோடி, ''தேன் மற்றும் குங்குமப் பூ விற்பனை திட்டம், ரூ.700 கோடி ஏற்றுமதிக்கு வழிவகுத்துள்ளது, இதன் மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது'' என்றார்.

தொடர்ந்து, 75வது சுதந்திர தினத்தை குறிப்பிட்ட பிரதமர், ''இது பெருமிதமான தருணம் மட்டும் அல்ல, புதிய தீர்மானங்களுக்கான வாய்ப்பு. வரும் 25 ஆண்டுகளில், இந்தியாவை நாம் எங்கே பார்க்க விரும்புகிறோம் என்பதை தீர்மானிக்க, நாம் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 2047-ம் ஆண்டு 100வது சுதந்திர தினத்தை நாடு நிறைவு செய்யும்போது, இந்தியாவின் நிலையை தீர்மானிப்பதில், நமது வேளாண்மை மற்றும் விவசாயிகளுக்கு மிகப் பெரிய பங்கு உண்டு. புதிய சவால்களை சந்திக்கவும், புதிய சந்தர்ப்பங்களின் சாதகத்தை எடுத்துக் கொள்ளவும், இந்திய வேளாண்மைக்கு வழிகாட்ட இதுதான் சரியான நேரம். மாறிவரும் காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப, இந்திய விவசாயத்தில் மாற்றங்கள் தேவை'' என அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், ''பிரதமரின் கிசான் சமான் நிதி திட்டத்தின் கீழ், இதுவரை விவசாயிகளுக்கு ரூ.1.60 கோடி வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் ரூ. 1 லட்சம் கோடி கொரோனா காலத்தில், சிறு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. கொரோனா காலத்தில், 2 கோடிக்கும் மேற்பட்ட கிசான் கடன் அட்டைகள் வழங்கப்பட்டன. உணவு பூங்காக்கள், கிசான் ரயில்கள் மற்றும் உள்கட்டமைப்பு நிதி ஆகியவை சிறு விவசாயிகளுக்கு உதவும். கடந்தாண்டில், உள்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டன. இந்த நடவடிக்கைகள், சிறு விவசாயிகளின் சந்தைகளுக்கான அணுகலையும், விவசாய உற்பத்தியாளர் சங்கம் மூலம் பேரம் பேசும் சக்தியையும் அதிகரித்தது'' என்றும் பிரதமர் கூறினார்.