MS Dhoni Twitter
Cricket

’கேப்டன் கூல்’தான்.. ஆனா, கோவம்னு வந்துட்டா! .. தோனி களத்தில் ஆவேசப்பட்ட 7 தருணங்கள்!

கிரிக்கெட் உலகில் மிஸ்டர் கூல் என்று அழைக்கப்படும் தோனி, களத்திலேயே நடுவர்களிடம் கோவப்பட்ட தருணங்களும் உண்டு. அதுபற்றி இங்கு காணலாம்.

சங்கீதா

தோனியா இப்படி செய்தது? தோனியே செய்திருந்தாலும் இது தப்புதானே?.. மற்றவர்கள் இப்படி செய்திருந்தால் இந்நேரம் நடவடிக்கை பாய்ந்திருக்கும் தானே? என பலரும் விமர்சனங்களை முன் வைக்கும் அளவிற்கு குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் தோனியின் நடவடிக்கை இருந்ததாக சொல்லப்படுகிறது. அந்தப் போட்டியில் நடந்தது என்ன என்பதோடு, தோனி நடுவர்களிடம் ஆவேசப்பட்ட, வாக்குவாதம் செய்த 7 தரமான சம்பவங்களை இங்கு பார்க்கலாம்..

1. இந்தியா vs ஆஸ்திரேலியா (2012)

Ms Dhoni

கடந்த 2012-ம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக சிபி தொடரில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது பகுதிநேர பந்துவீச்சாளரான சுரேஷ் ரெய்னா வீசிய 29-வது ஓவரில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக் ஹஸ்ஸியை தோனி ஸ்டெம்பிங் செய்தார். மூன்றாவது நடுவரின் பார்வைக்கு அது செல்ல, பின்னர் அவுட் கொடுக்கப்பட்டு அவர் பெவிலியனுக்கு சென்றுக்கொண்டிருந்தார். மூன்றாவது நடுவரின் முடிவில் தவறு இருப்பதாக ஹஸ்ஸியை மீண்டும் ஆடுவதற்கு நடுவர் பில்லி பௌடென் அழைத்தார். அப்போது கோபமடைந்த தோனி நடுவர் பௌடெனுடன் வாதம் செய்தார்.

2. இந்தியா vs ஆஸ்திரேலியா (2013)

கடந்த 2013-ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்திருந்தது. மொஹாலியில் நடந்த 3-வது ஒருநாள் போட்டியில் அஸ்வின் வீசிய 41வது ஓவரில் நடுவர் ஷம்சுதின் வைடு கொடுக்க, அப்போது நடுவருடன் தோனி வாதம் செய்தார். பின்னர் நடுவர் தனது முடிவை மாற்றிக்கொண்டார்.

3. இந்தியா vs தென்னாப்பிரிக்கா (2015)

கடந்த 2015-ம் ஆண்டு தென்னாப்பிரிக்க அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்திருந்தது. 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா பின்னடைவை சந்தித்தது. 3-வது போட்டியில் நடுவர் வினீத் குல்கர்னியின் அம்பயரிங் மோசமாக இருந்ததாக இந்திய அணியினர் புகார் தெரிவித்திருந்தனர்.

MS Dhoni

அடுத்த போட்டியில் ஹர்பஜன் வீசிய பந்தில் ஃபார்ஹான் பெஹார்டியன் டிப் கேட்ச் ஆனது போல இருந்தது. அதற்கு ஹர்பஜன் நடுவரிடம் லேசாக அவுட் கேட்க, தோனி ஆவேசத்துடன் அவுட் கேட்டார். அப்போது குல்கர்னி அவுட் கொடுத்தார். தோனி கொடுத்த அழுத்தத்தினால் தான் குல்கர்னி அவுட் கொடுத்ததாக சர்ச்சையானது.

4. சிஎஸ்கே vs ஆர்ஆர் (ஐபிஎல் 2019)

CSK vs RR

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராஜஸ்தானுக்கு எதிராக சேஸிங் செய்தது. அப்போது பென் ஸ்டோக்ஸ் வீசிய பந்து ஃபுல் டாஸாக சான்ட்னரின் இடுப்புக்கு மேல் வந்தது. அந்த பந்தை நோ-பால் ஆக நடுவர் கொடுப்பார் என எதிர்பார்த்தபோது, நோ-பால் கொடுக்கப்படவில்லை. அப்போது மைதானத்திற்குள் நடந்து சென்று நடுவர் உல்கஸ் கண்டேவிடம் தோனி வாதிட்டார்.

5. சிஎஸ்கே vs ஆர்ஆர் (ஐபிஎல் 2020)

CSK vs RR

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தீபக் சாஹர் வீசிய 18-வது ஓவரில் டாம் குரான் டிப் கேட்ச் ஆனார். நடுவரும் அவுட் கொடுத்தார். பின்னர் ரீப்ளேயில் பார்த்தபோது, பந்து கீழே பட்டப் பின்னரே அதை தோனி பிடித்தது உறுதி செய்யப்பட்டதால் அவுட் திரும்பப் பெறப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த தோனி ராஜஸ்தான் அணிக்கு ரிவ்யூ ஆப்ஷன் இல்லாமல் எப்படி 3-வது நடுவரிடம் ‘ரீப்ளே செய்ய சொன்னீர்கள்’ என நடுவரிடம் கோபப்பட்டார்.

6. சிஎஸ்கே vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (ஐபிஎல் 2020)

MS Dhoni-warner

சன்ரைசர்ஸ் அணியின் பேட்டிங்கின்போது, 19வது ஓவரை சிஎஸ்கே பவுலர் ஷர்துல் தாகூர் வீசினார். அந்த ஓவரின் 2வது பந்தை அவர் வைடாக வீச, அதற்கு வைடு கொடுக்க முற்பட்டார் அம்பயர் பால் ரேஃபில். வைடு கொடுக்க அம்பயர் பால் கையை தூக்க முயல்வதை கண்ட தோனி, அது வைடு அல்ல என்று தனது அதிருப்தியை கோபமாக வெளிப்படுத்தினார். தோனியின் அதிருப்தி கலந்த கோபத்தை கண்ட அம்பயர், தனது வைடு முடிவிலிருந்து பின்வாங்கினார்.

7. சிஎஸ்கே vs குஜராத் டைட்டன்ஸ் (ஐபிஎல் 2022)

Dhoni and Pathirana

நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான பிளே ஆஃப் போட்டியில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், இரண்டாவது இன்னிங்சின்போது போட்டியின் 12-வது ஓவரை பதிரனா வீசினார். அதன் பிறகு ஓய்வு எடுக்க வெளியில் சென்ற பதிரனா 9 நிமிடங்கள் ஓய்வு எடுத்த பிறகு 15-வது ஓவரின் போது மீண்டும் களத்திற்கு வந்து 4 நிடமிங்கள் பீல்டிங் செய்தார். அதன் பிறகு 16-வது ஓவரை அவர் வீச அழைக்கப்பட்டபோது அவருக்கு நடுவர்கள் மறுப்பு தெரிவித்தனர். அப்போது குறுக்கிட்ட தோனி, ஏன் என்று விளக்கம் கேட்டு நடுவர்களுடன் வாக்கு வாதம் செய்து, பதிரனாவுக்காக தோனி அந்த 5 நிமிடமும் வாக்குவாதத்திலேயே ஈடுபட்டார். சரியாக 9 நிமிடங்கள் ஆன பிறகு மீண்டும் பதிரனா பந்துவீச அனுமதிக்கப்பட்டார்.

தோனி களத்தில் வீரர்களிடம் காட்டிய கோபத்தை அடுத்தப் பதிவில் பார்க்கலாம்..