world cup file image
Cricket

என்ன இந்த 5 இந்திய வீரர்களும் உலகக்கோப்பையில் கிடையாதா? நிலவரம் இதுதான்!

Prakash J

கோடை வெயிலையும் குளிர்ச்சியாக்கும் விதத்தில் ரசிகர்களுக்கு விருந்து படைத்து வரும் இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் 16வது சீசன், தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் 31ஆம் தேதி தொடங்கிய இந்த தொடர் அடுத்த மாதம் 28ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

ஐபிஎல்-க்குப் பிறகு இந்திய அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டிக்குப் பிறகு இந்திய அணி, மேற்கிந்திய தீவுகள் மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகளுடன் விளையாட இருக்கிறது. அதைத் தொடர்ந்து ஆசியக் கோப்பை மற்றும் உலகக் கோப்பை தொடர்கள் நடைபெற உள்ளன.

உலகக்கோப்பையை வெல்லும் முனைப்பில் பல அணிகளும் ஆர்வம் காட்டி வருகின்றன. அதற்காக, சில அணிகள் தங்களுடைய வீரர்களை சர்வதேச போட்டிகளைத் தவிர இதர போட்டிகளில் பங்கேற்காத அளவுக்கு தடை விதித்துள்ளன. ஏனெனில், சாதாரண போட்டிகளில் விளையாடி வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால் அது, உலகக்கோப்பையின்போது பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் முன்கூட்டியே இத்தகைய நடவடிக்கைகளை சில அணி நிர்வாகங்கள் எடுத்து வருகின்றன.

இந்திய அணியிலும் காயம் காரணமாக, தற்போதைய ஐபிஎல் தொடரில் பங்கேற்க சில வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் காயம் மற்றும் திறமையின்மை காரணமாக இந்திய வீரர்களில் சிலர், உலகக் கோப்பை தொடரிலிருந்து விலகலாம் எனக் கூறப்படுகிறது. அந்த வகையில் குறிப்பிட்ட 5 வகை வீரர்களைப் பார்க்கலாம்.

ரிஷப் பந்த்

கடந்த ஆண்டு இறுதியில் கார் விபத்துக்குள்ளான ரிஷப் பந்த், தற்போது அறுவைச்சிகிச்சைக்குப் பிறகு ஓய்வெடுத்து வருகிறார். இவர் முழுதாய் குணமடைய இன்னும் சில மாதங்கள் ஆகலாம் எனக் கூறப்படுகிறது.

Rishabh

இதனால், அவர் இந்த வருடம் நடைபெற இருக்கும் உலகக் கோப்பை தொடரைத் தவறவிடுவார் எனக் கூறப்படுகிறது. அவர், ஏற்கெனவே இந்த ஆண்டு தொடக்கம் முதல் தற்போதைய ஐபிஎல் போட்டி வரை பல போட்டிகளைத் தவறவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷிகர் தவான்

இந்திய அணியின் தொடக்க வீரராக நல்ல பங்களிப்பைக் கொடுத்திருந்தாலும், சமீபகாலமாக ஷிகர் தவானும் பெருமளவில் சோபிக்கவில்லை. தற்போதைய ஐபிஎல்-ல் ஐதராபாத்துக்கு எதிராக 99 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்ததே அவருடைய பெரிய ஸ்கோர் எனலாம். அதேநேரத்தில், தவானைவிட, சுப்மன் கில்லின் பங்களிப்பு சிறப்பாக இருக்கிறது என இந்திய அணி கருதுகிறது.

shikhar dhawan

இதனால், வரும் உலகக்கோப்பை தொடரில் ஷிகர் தவானுக்கான வாய்ப்பும் பறிபோகலாம் எனக் கூறப்படுகிறது. அதேநேரத்தில், இந்த ஐபிஎல் தொடரில் ஒருவேளை ஜொலித்தால், அவருக்கு வாய்ப்பு வழங்கப்படுவது குறித்தும் பரிசீலிக்கப்படும் எனத் தெரிகிறது.

தீபக் சாஹர்

கடந்த ஆண்டு காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகியிருந்த சென்னை அணி வீரரான தீபக் சாஹர், இந்த சீசனிலும் 2 போட்டிகளில் பங்கேற்ற நிலையில், மீண்டும் காயம் காரணமாக போட்டிகளில் பங்கேற்கவில்லை. இதனால், அவருக்கும் உலகக்கோப்பை தொடரில் இடம் கிடைக்காமல் போகலாம் எனக் கூறப்படுகிறது.

தீபக் சாஹர்

அவருக்குப் பதில் ஷர்துல் தாக்கூருக்கு இடம் கிடைக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. தற்போதைய ஐபிஎல்-ல் ஷர்துல் தாக்கூர் சிறப்பாகச் செயல்படுவதால், சாஹருக்குப் பதில் அந்த இடத்தில் ஷர்துல் முன்னேறலாம் எனச் சொல்லப்படுகிறது. ஒருவேளை, காயத்தில் இருந்து குணமாகி, போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்டால், உலகக்கோப்பையில் தீபக் சாஹரே அந்த இடத்தைத் தக்கவைக்க முடியும் என்பதில் ஐயமில்லை.

வாஷிங்டன் சுந்தர்

இந்திய அணியைப் பொறுத்தவரை அஸ்வின், ஜடேஜா, அக்சர் படேல் ஆகியோர் சிறப்பாகச் செயல்படுவதால் உலகக்கோப்பை தொடரில் தமிழக வீரரும் ஆல்ரவுண்டருமான வாஷிங்டன் சுந்தருக்கான இடம் கேள்விக்குறியாகி உள்ளது. போட்டி நிறைந்த இந்திய அணியில், சுந்தருக்கு இடம் கிடைப்பது என்பதே அரிதாகி வரும் நிலையிலும், கிடைக்கும் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொண்டு சாதிக்கக் கூடியவர்.

வாஷிங்டன் சுந்தர்

ஆனாலும், அவரைவிட பல திறமையானவர்கள் இருப்பதால் இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகமாய் உள்ளது. கடந்த காலங்களில் அவரும் காயங்களால் அவதிப்பட்ட நிலையில், தற்போது ஐபிஎல்-க்கு திரும்பியிருக்கிறார். இதில் அவர் பிரகாசித்தாலும், பயங்கர போட்டிக்கு இடையேயே அவர் தேர்வு செய்யப்படுவார் அல்லது அவருக்குப் பதில் மேற்கண்ட வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது.

சூர்யகுமார் யாதவ்

இந்தியாவின் 360 வீரர் என அழைக்கப்படும் சூர்யகுமார் யாதவ்வுக்கும் உலகக்கோப்பையில் இடம் கிடைக்குமா என்பது சந்தேகமாகவே உள்ளது. காரணம், அவர் சமீபத்திய தொடர்கள் முழுதும் சொதப்பியே வருகிறார். அத்துடன் தொடர்ந்து டக் அவுட்டில் விக்கெட்டைப் பறிகொடுத்ததும் பேசுபொருளானது. இன்னும் சொல்லப்போனால், தற்போதைய ஐபிஎல்லிலும் தொடர்ந்து சொதப்பி வருகிறார்.

சூர்யகுமார் யாதவ்

கடந்த கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் மட்டும் அவர் 43 ரன்கள் எடுத்தார். ஆகையால் சூர்யகுமாருக்குப் பதில், ஷ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் எனச் சொல்லப்படுகிறது. அதேநேரத்தில் இந்த ஐபிஎல் தொடரிலேயே அவர் மீண்டும் ஃபார்முக்குத் திரும்பினால் சூர்யகுமார் யாதவ்வே உலகக்கோப்பை தொடரில் இடம்பெறுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

உலகக்கோப்பையைக் கருத்தில் கொண்டு 17 அல்லது 18 வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். அதன்படி, தற்போதைய ஐபிஎல்-ல் ஜொலிக்கும் வீரர்களுக்கும் உலகக்கோப்பை தொடரில் வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.

என்றாலும், உலகக்கோப்பையைப் பொறுத்தவரை அனுபவ வீரர்களுக்குத்தான் முன்னுரிமை அளிக்கப்படும் என்பதைக் கருத்தில் கொண்டு மேற்கண்ட வீரர்களும் பரிசீலிக்கப்படுவார்கள். ஆனாலும், இது முடிவல்ல. உலகக்கோப்பைக்கு இன்னும் 6 மாதங்கள் இருப்பதால் அதற்குள் நிறைய மாற்றங்கள் இருக்கலாம் என்கின்றனர், கிரிக்கெட் வல்லுநர்கள்.