உக்ரைன் நாட்டு ராணுவ தளபதியான எட்வர்ட் மிகளோவிச் மோஸ்க்ளோவை, அந்நாடு அதிபர் ஜெலன்ஸ்கி, எந்தவித காரணமும் சொல்லாமல் இன்று காலை பதவியிலிருந்து நீக்கியுள்ளார். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் போர், கடந்த பிப்ரவரி 24ஆம் தேதியுடன் ஒரு வருடத்தை நிறைவு செய்தது. என்றாலும், இப்போதுவரை இருதரப்பிலும் போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெறவில்லை என்பதால், தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் நிதியுதவியும் ஆயுதங்களும் அளித்து வருகின்றன. அதேநேரத்தில், இப்போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இந்தச் சூழலில், `உக்ரைனில் இருந்து ரஷ்ய ராணுவம் உடனடியாக வெளியேற வேண்டும்' என்பதை வலியுறுத்தி சமீபத்தில் ஐ.நா. பொது சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதில் 141 நாடுகள் ஆதரவாகவும், 7 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. இந்தியா உள்பட 32 நாடுகள் வாக்களிப்பை புறக்கணித்தன. இது ஒருபுறமிருக்க, மறுபுறம் உக்ரைன் அரசு இந்தப் போரை நினைவுகூரும் வகையில், புதிய தபால் தலை ஒன்றை வெளியிட்டு ரஷ்யாவை கேலி செய்துள்ளது. அதில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், ஜூடோ போட்டியில் ஒரு சிறுவனிடம் தோற்பதாக, அதாவது அவரை அடித்து கீழே சாய்ப்பதாக, தபால் தலை ஒன்றை வெளியிட்டுள்ளது. இது, உக்ரைன் நாட்டு மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த நிலையில், உக்ரைன் நாட்டு ராணுவ தளபதியான எட்வர்ட் மிகளோவிச் மோஸ்க்ளோவை, அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி எந்தவித முன்னறிப்பவும் இன்றி பதவியில் இருந்து நீக்கியுள்ளார். அவருடைய பதவி பறிப்புக்கான காரணம் குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் உக்ரைன் அரசு நிர்வாகம், ஊழல் மற்றும் லஞ்சம் தொடர்பாக பல அரசு அதிகாரிகளை கடந்த சில மாதங்களாக கையும் களவுமாக பிடித்துவருகிறது. அந்தவரிசையில்தான் இவர்மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் என கணிக்கப்படுகிறது. என்றாலும்கூட ராணுவத் தளபதி, மோஸ்க்ளோவ் எந்தவித ஊழலிலும் ஈடுபடவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர், கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்த பதவிக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ராணுவ தளபதி மீது அதிபரின் இந்த திடீர் நடவடிக்கை அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
- ஜெ.பிரகாஷ்