லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள குடியிருப்பு கட்டடத்தை குறி வைத்து, இஸ்ரேல் குண்டுவெடிப்பு தாக்குதலை நடத்தியுள்ளது. குடியிருப்பு கட்டடத்திற்கு கீழ், பூமிக்கடியில் அமைந்துள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் தலைமையகத்தை குறி வைத்து, இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 70க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் லெபனான் கூறியுள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நசரல்லாவை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இந்த தாக்குதலில் அவரது மகள் ஜெய்னாப் நசரல்லா உயிரிழந்துள்ளதாகவும், இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆனால், இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. தாக்குதல் நடத்தப்பட்டபோது, நசரல்லாவும் அந்த கட்டடத்தில் இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இருப்பினும், அவரின் நிலை குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இந்த சூழலில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, அமெரிக்க பயணத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.