அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் சப் டாக்ஸ் என்ற உணவகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பணிபுரியும் பெண் அலெய்னா கஸ்டர். இவர் கிழக்கு கரோலினாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். பகுதிநேரமாகத் தான் அந்த உணவகத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சப் டாக்ஸ் உணவகத்திற்கு ஒரு வாடிக்கையாளர் வருகை தந்துள்ளார். அவரிடம் அலெய்னா, என்ன வேண்டும்? என கேட்க, 2 டம்பளர் தண்ணீர் மட்டும் கேட்டுள்ளார்.
அதனைக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு, மற்ற வாடிக்கையாளர்களை கவனிக்க அலெய்னா சென்றுவிட்டார். சிறிது நேரத்திற்கு பிறகு அந்தப் பெண் அந்த வாடிக்கையாளரின் இருக்கை சென்று பார்த்தபோது, அவரை காணவில்லை. ஆனால் அங்கு பணம் குவித்து வைக்கப்பட்டிருந்தது. அதனுடன் ஒரு துண்டுச்சீட்டில், சுவையான தண்ணீருக்கு நன்றி, அதற்கான பரிசு இது எனவும் எழுதப்பட்டிருந்தது.
அந்தப் பெண்ணிற்கு ஒன்றும், புரியவில்லை. பின்னர் சிறிது நேரத்திற்குப் பின்னர் அதே நபர் தனது நண்பர்களுடன் வந்துள்ளார். அப்போது தான் அந்த உணவகத்திலிருந்தவர்களுக்கு தெரிந்துள்ளது வந்த நபர் யுடியூப் பிரபலம் பீஸ்ட் என்பது. அவரை யுடியூப்பில் 80 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக பேசிய அப்பெண், “நான் பார்த்தப்போது கட்டாக பணம் இருந்தது. அதை எடுத்துப் பார்த்தபோது 100 டாலர் நோட்டுகளா இருந்தன. அதை நான் ஆட்டிப்பார்த்து என்ன இது? என எனது சக ஊழியர்களிடம் கேட்டேன். அத்துடன் என்னை யாரோ ப்ராங்க் பன்றாங்கனு நினைச்சேன்” என்று தெரிவித்தார். மேலும் இந்த நாளை தன் வாழ்வில் மறக்க முடியாது எனவும் அலெய்னா தெரிவித்துள்ளார்.
(Courtesy : CBS News)