ஏமனில் இருந்து செயல்படும் ஹவுதி அமைப்பினர் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளதாகவும், இனியும் தாக்குதல் தொடரும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஹவுதி அமைப்பின் எச்சரிக்கையால் அரேபிய தீபகற்பம் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அசாதாரண சூழல் நிலவுகிறது.
ஹவுதி ராணுவ செய்தித்தொடர்பாளர் யாஹ்யா சாரி வெளியிட்டுள்ள வீடியோவில், இஸ்ரேலை நோக்கி பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. காஸாவில் பாலஸ்தீனர்களின் வெற்றிக்கு உதவ இது போன்ற தாக்குதல்கள் தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஈரான் ஆதரவுடன் செயல்படும் ஹவுதி அமைப்பினர் ஏமன் நாட்டின் சனாவில் இருந்து ஆயிரம் மைலுக்கு மேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இஸ்ரேல் - ஹமாஸ் போர் தொடங்கியதில் இருந்து 3ஆவது முறையாக ஹவுதி அமைப்பினர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதனை உறுதி செய்யும் விதமாக செங்கடல் பகுதிகளில் இருந்து தொடர்ச்சியாக ஏவுகணை தாக்குதல் நடத்தப்படுவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.