அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் மகளும், வெள்ளை மாளிகையின் மூத்த ஆலோசகருமான இவாங்கா இரண்டாவது முறையாக இந்தியா வந்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் முன்னாள் செக் அமெரிக்க மாடல் இவானா ஆகியோருக்கு 1981-ஆம் ஆண்டு அக்டோபர் 30-ஆம் தேதி பிறந்தவர் இவாங்கா. சிறு வயதிலிருந்தே விடுதியில் படித்த இவாங்கா, 2004-ஆம் ஆண்டு பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்திற்கான இளங்கலை பட்டம் பெற்றார்.
அதன் பின்னர் மாடலிங் துறையில் பயணிக்க விரும்பிய இவாங்கா, படிக்கும்போதே வார இறுதிநாட்களில் மாடல் அழகியாகவும் ஜொலித்தார். இதன் மூலம் 16 வயதில் அழகிப் போட்டியை தொகுத்து வழங்கும் அளவிற்கு வளர்ச்சியடைந்தார். இதுமட்டுமல்லாமல் மாடலிங் துறையில் ஆடை வடிவமைப்பாளராகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார்.
இதனையடுத்து 2003-ஆம் ஆண்டு வெளிவந்த BORN RICH என்ற ஆவணப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் இவாங்கா. அதன்பின் ஃபாரஸ்ட் சிட்டி என்டெர்பிரைசஸ் எனும் நிறுவனத்தில் பணிபுரிந்தார். இதனைத்தொடர்ந்து வைர நிறுவனம் ஒன்றில் பங்குதாரராக இருந்த இவாங்கா, 2007-ஆம் ஆண்டு மன்ஹாட்டன் நகரில் ஃபைன் என்ற பெயரில் நகைக்கடையை தொடங்கினார்.
இது மட்டுமின்றி, தனது தந்தையைப் பற்றி The trump card: playing to win in work and life என்ற புத்தகத்தை 2009-ஆம் ஆண்டு எழுதிய இவாங்கா எழுத்தாளராகவும் தன்னை நிலைநிறுத்தினார். அதன் பின்னர் இரண்டு வருடங்கள் ரியல் எஸ்டேட் துறை தொடர்பாக பயிற்சி மேற்கொண்ட இவாங்கா, தனது தந்தை ட்ரம்பின் ரியல் எஸ்டேட் தொழிலில் இணைந்து அதிக லாபமும் ஈட்டினார்.
மாடல், எழுத்தாளர், நடிகை, ஆடை வடிவமைப்பாளர், தொழிலதிபர் என பன்முகம் கொண்ட இவாங்கா அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திகொண்டார். தந்தைக்காக பரப்புரையில் ஈடுபட்டுவரும் இவாங்கா, வெள்ளை மாளிகையில் சம்பளம் பெறாத அலுவலகராக ட்ரம்புக்கு ஆலோசனை வழங்கி வருகிறார்.