6,300 லிட்டர் பெயிண்டில் தயாரிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய கேன்வாஸ் ஓவியம் 450 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பணத்தை திரட்டுவதற்கான ஒரு வழியாக பிரிட்டிஷ் கலைஞர் சச்சா ஜாஃப்ரி பிரமாண்டமான ஓவியத்தை உருவாக்கியுள்ளார். 17,000 சதுர அடி அளவைக் கொண்ட இந்த கலைப்படைப்புக்கு 'மனிதநேயத்தின் பயணம்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
6,300 லிட்டர் பெயிண்ட் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த கலைப்படைப்புகளை கலைஞர் சச்சா ஜாஃப்ரி 70 பிரேம்களாகப் பிரித்து, 30 மில்லியன் டாலர் இலக்கை அடைய பிரேம்களை தனித்தனியாக விற்க திட்டமிட்டிருந்தார். ஆனால் துபாயில் நடந்த ஏலத்தில் ஆண்ட்ரே அப்தவுன் என்ற தொழிலதிபர் அனைத்து பிரேம்களுக்கும் இரு மடங்கிற்கும் அதிகமாக தொகையினை வழங்கினார். அதாவது அந்த ஓவியத்தை 450 கோடிக்கு ஏலம் எடுத்தார். ஆண்ட்ரே அப்தவுன் கிரிப்டோ-நாணய வணிகத்தை நடத்தி வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “நான் ஒரு ஏழைக் குடும்பத்திலிருந்து வந்தவன். சாப்பிட எதுவும் இல்லை என்றால் எப்படி இருக்கும் என்று எனக்கு தெரியும். ஆனால் குறைந்தபட்சம் என் பெற்றோரின் அன்பு, பள்ளிப்படிப்பு மற்றும் ஆதரவு எனக்கு இருந்தது. இந்த ஓவியம் மிகவும் சக்தி வாய்ந்தது. என்னைப் பொறுத்தவரை, பிரேம்களை பிரிப்பது தவறு. கொரோனா குழந்தைகளை அதிகமாக பாதிக்கிறது. நாம் அதற்கு எதிர்வினையாற்ற வேண்டும். இந்த முயற்சியில் என்னுடைய சிறு பங்களிப்பு இருந்தால் நான் மகிழ்ச்சியடைவேன்” என்றார்.