கடந்த 1942ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் மிகத் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் பப்புவா நியூ கினியாவில் இருந்து சீனாவின் ஹைனான் நகருக்கு ஜப்பானிய வணிக கப்பல் சென்று கொண்டிருந்தது. எஸ்.எஸ். மோன்டேவீடியோ மாரு என்ற பெயர் கொண்ட இந்தக் கப்பலில் 864 ஆஸ்திரேலிய வீரர்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இருந்தனர்.
இந்த கப்பல் பிலிபைன்ஸ் கடல் பகுதியில் உள்ள சென்று கொண்டிருந்த போது லூசன் தீவு அருகே இந்த கப்பலை அமெரிக்க நீர் மூழ்கி கப்பல் தாக்கியது. இந்த தாக்குதலில் சேதம் அடைந்த கப்பல் கடலில் 4,000 மீட்டர் ஆழத்தில் மூழ்கியது. இந்த கப்பலை தேடும் பணியில் ஆஸ்திரேலிய கடற்படையினர் ஈடுபட்ட நிலையில், அது தோல்வியில் முடிந்தது. இதையடுத்து கப்பலில் பயணம் செய்த 1,000க்கும் மேற்பட்ட அனைவரும் இறந்திருக்கலாம் என அறிவிக்கப்பட்டது. கடந்த 80 ஆண்டுகளுக்கும் மேலாக மர்மமாகவே இருந்த இந்த விவகாரத்தில், ஜப்பானிய கப்பலின் சிதைவுகளை தேடும் பணி குறித்து அவ்வப்போது விவாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், சிட்னியை சேர்ந்த சைலண்ட் வேர்ல்டு ஃபவுண்டேஷன் என்ற அமைப்பு 84 ஆண்டுகளுக்கு முன்பு காணமல் போன இந்த கப்பலை தேடும் பணியில் இறங்கியது. அதிநவீன தொழில்நுட்பத்தின் மூலம் இந்தப் பணி நடைபெற்றது. கடலுக்கு அடியில் சுமார் 4 ஆயிரம் அடி ஆழம் வரையில் நடைபெற்ற தேடுதல் பணியில் கப்பலின் உதிரிபாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
டைட்டானிக் கப்பலை விட ஆழமான பகுதியில் இந்த கப்பல் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அப்பகுதியில் தொடர்ந்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும் கப்பலில் இருந்து எந்த ஒரு பாகத்தையும் எடுப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்படாது என்று தேடுதல் பணியில் ஈடுபட்ட அறக்கட்டளை அறிவித்துள்ளது.