12 வயதில் தொடங்கிய பிஸினஸ் தாகம்.. அசர வைக்கும் எலான் மஸ்க்கின் வெற்றிக்கதை!

12 வயதில் தொடங்கிய பிஸினஸ் தாகம்.. அசர வைக்கும் எலான் மஸ்க்கின் வெற்றிக்கதை!
12 வயதில் தொடங்கிய பிஸினஸ் தாகம்.. அசர வைக்கும் எலான் மஸ்க்கின் வெற்றிக்கதை!
Published on

2021 ஆம் வருடம் அனைவருக்கும் நல்லதொரு சிறப்பான ஆண்டாக அமைய வேண்டும் என எண்ணாதவர்களே இருக்க முடியாது. இருப்பவர்கள், இல்லாதவர்கள் என அனைவரும் இப்படி ஒருமித்த கருத்தில் ஒன்றிணைய காரணம் கொரோனாவின் கோரப்படி. அந்த வகையில் பன்முக திறன் கொண்ட அயல் நாட்டை சேர்ந்தவரான எலான் மஸ்கிற்கு 2021 ஆம் ஆண்டின் ஆரம்பமே அமர்க்களமாக தொடங்கி உள்ளது. ஜனவரி மாதத்தில் அமேசானின் ஜெப் பெஸாஸை சொத்து மதிப்பில் பின்னுக்கு தள்ளி உலகின் நெம்பர் ஒன் பணக்காரராக உருவெடுத்துள்ளார் 49 வயதான எலான் மஸ்க். 

இன்றைய தேதிக்கு அவருடைய சொத்து மதிப்பு சுமார் 202 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.  

யார் இவர்?

1971 ஆம் ஆண்டு ஜூன் 28 அன்று தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் பிறந்தவர் எலான் மஸ்க். அவரது அப்பா எர்ரால் மஸ்க் தென்னாப்பிரிக்காவை சேர்ந்தவர். எலக்ட்ரோ மெக்கானிக்கல் பொறியாளர், விமானி, கப்பலோட்டி என சகலகலா வல்லவன். அவரது அம்மா மேயா மஸ்க் கனடாவில் பிறந்து, தென்னாப்பிரிக்காவில் வளர்ந்தவர். மாடல் மற்றும் டயட்டிஷியனாக பணியாற்றியவர். மஸ்க்கிற்கு கிம்பல் என்ற தம்பியும், டோஸ்க்கா என்ற தங்கையும் உண்டு. தென்னாப்பிரிக்கா, கனடா மற்றும் அமெரிக்க குடியுரிமையை பெற்றுள்ளவர் மஸ்க். அவரது முன்னோர்கள் சிலர் டச்சு மற்றும் பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்தவர்களாகவும் இருந்துள்ளனர். 

எல்லோருக்கும் பால்ய காலமான குழந்தைப் பருவம் என்பது வரம். ஆனால் மஸ்க் விஷயத்தில் அது சாபம். அவருக்கு ஒன்பது வயது நிரம்பியிருந்த போதே மஸ்கின் பெற்றோர்கள் பரஸ்பர விவாகரத்து செய்து கொண்டனர். அதனால் அப்பாவின் அரவணைப்பில் பெரும்பாலும் இருந்த மஸ்கிற்கு அந்த நாட்களின் ஒவ்வொரும் நிமிடமும் வருஷங்களாகும். 

இருப்பினும் பத்து வயதிலேயே கணினியில் விரல் வித்தை காட்ட ஆரம்பித்துள்ளார் மஸ்க். Commodore VIC-20 கம்யூட்டரை தான் மஸ்க் முதன்முதலில் பயன்படுத்தியுள்ளார். ஒரு மேனுவலை பயன்படுத்தி கம்யூட்டர் புரோகிராமிங் துணையோடு பிளாஸ்டர் டூ PC என்ற வீடியோ கேமை வடிவமைத்துள்ளார் மாஸ்டர் மஸ்க். அதை சுமார் 500 அமெரிக்க டாலருக்கு விற்பனையும் செய்துள்ளார். அப்போது அவருக்கு பன்னிரண்டு வயது. தென்னாப்பிரிக்காவில் பள்ளிப்படிப்பை முடித்ததும் மேற்படிப்புக்காக அமெரிக்கா செல்ல தீர்க்கமாக இருந்தார் மஸ்க். இருப்பினும் அம்மாவின் குடியுரிமையை பயன்படுத்தி கனடா பறந்த அவர் அங்கு பொருளாதாரம் மற்றும் இயற்பியலில் இளங்கலை பட்டம் முடித்தார். இடைப்பட்ட காலத்தில் விவசாய தோட்டத்திலும் மஸ்க் பணியாற்றியுள்ளார். அமெரிக்காவின் சிலிக்கான் வேலியில் இன்டெர்ன்ஷிப்புக்காக பினாக்கல் ஆய்வு கூடத்திலும், ராக்கெட் சயின்ஸ் கேம்ஸ் ஸ்டார்ட் அப்பிலும் மஸ்க் பணி அனுபவம் பெற்றுள்ளார்.     

தொடர்ந்து நெட்ஸ்கேப் நிறுவனத்தில் வேலைக்காகவும் மஸ்க் முயற்சித்துள்ளார். அவரது முயற்சிக்கு பலன் கிடைக்காத நிலையில் 1995இல் தன் சகோதரர் கிம்பல் மற்றும் கிரெக் என்றவருடன் இணைந்து ZIP2 என்ற நிறுவனத்தை நிறுவினார் மஸ்க். செய்தித்தாள்கள் அச்சிடும் நிறுவனங்களுக்கு நகரின் ரூட் மேப், போகும் வழிகள் மற்றும் டெலிபோன் எண்களை இணையத்தின் உதவியோடு கட்டமைப்பு அவர்களுக்கு உதவுவது தான் ZIP2வின் பணி. அந்த முயற்சி வெற்றிபெறும் வரை மஸ்க் கலிபோர்னியாவில் இருந்த அலுவலகத்திலேயே தங்கி பணியாற்றியுள்ளார். வாடகை வீட்டில் கூட தங்க வசதியில்லாத நிலை அவருக்கு. ஒரே ஒரு கணினியுடன் அந்த அலுவலகம் அப்போது இயங்கியுள்ளது. பகல் நேரத்தில் வெப்சைட் ஆக்டிவாக இருக்குமாம். இரவு நேரத்தில் மஸ்க் அதில் கோடிங் செய்வது வாடிக்கையாம். நியூயார்க் டைம்ஸ் மாதிரியான நாளிதழ்கள் மஸ்கின் உதவியை நாட அவர்களது நிறுவனம் வளர்ந்துள்ளது. இருப்பினும் 1999இல் வேறொரு நிறுவனத்திடம் ஒப்படைத்ததன் மூலம் மஸ்கிற்கு 22 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கிடைத்துள்ளது. 

தொடர்ந்து அதில் கிடைத்த தொகையில் 10 மில்லியன் டாலரை கொண்டு X.காம் நிறுவனத்தை சிலருடன் இணைந்து  1999இல் நிறுவியுள்ளார் மஸ்க். ஆன்லைன் மூலமாக நிதி சேவை வழங்குவது தான் இந்நிறுவனத்தின் பணி. ஓராண்டுக்கு பிறகு பேபால் நிறுவனத்துடன் அதை இணைத்தார் மஸ்க். அதே சமயத்தில் 2002 வாக்கில் மலிவு விலை ராக்கெட்டுகளை உருவாக்கும் நோக்கில் ஸ்பேஸ்X நிறுவனத்தை மஸ்க் 100 மில்லயன் அமெரிக்க டாலர்களை முதல் போட்டு தொடங்கியிருந்தார். அதோடு அதே ஆண்டில் அக்டோபர் வாக்கில் பேபால் நிறுவனத்தை ஈ பேவிடம் கொடுத்ததன் மூலம் 165 மில்லியன்அமெரிக்க டாலர்களை ஈட்டியிருந்தார்.

2004இல் டெஸ்லா குழுமத்தில் இணைந்தார். அந்த காலகட்டத்தில் அதிகம் முதலீடுகளில் கவனம் செலுத்தி வந்தார் மஸ்க். அமெரிக்காவில் சோலார் மின்சாரம் வழங்கி வரும் சோலார் சிட்டி நிறுவனத்தை உறவினர்களுடன் இணைந்து 2006இல் நிறுவினார். 2008இல் டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியாக உயர்ந்தார். எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்வது தான் டெஸ்லாவின் பணி.  

ஸ்பேஸ்X நிறுவனத்திற்கு 2011இல் நாசாவின் ஆதரவு கிடைத்ததால் தனது மன ஓட்டத்திற்கு தீனி போட ஆரம்பித்துக் கொண்டார் மஸ்க். அதன் மூலம் விண்வெளியில் சாத்தியம் இல்லை என சொன்னதை சாத்தியமாக்கினார்.  கடந்த 2020இல் தனியார் நிறுவனமான ஸ்பேஸ்X ‘டெமோ2’ மூலமாக மனிதனை விண்ணுக்கு அனுப்பி சாதனை படைத்தார் மஸ்க். 2015இல் ஓபன் AI நிறுவனத்தையும் நிறுவினார். 

2016இல் மனித மூளையை  இயந்திரத்துடன் இணைக்கும் நியூராலிங் மற்றும் குகைகளை அமைக்கும் தி போரிங் கம்பெனியையும் நிறுவினார். மூன்று முறை திருமணம் செய்து கொண்டு விவாகரத்தானவர் மஸ்க். தற்போது கனட பாடகி GRIMES உடன் இணைந்து வாழ்ந்து வருகிறார். 

அயர்ன் மேன்2 உட்பட சில ஹாலிவுட் படங்களில் கவுரவ தோற்றத்தில் மஸ்க் நடித்துள்ளார். 

இப்படி பல்வேறு தொழில் மற்றும் முதலீடுகளின் மூலமாக தற்போது 202 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு அதிபதியாகவும், உலகின் நம்பர் ஒன் பணக்காரராகவும் மஸ்க் வளர்த்துள்ளார். 

-எல்லுச்சாமி கார்த்திக்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com