உலகிலேயே மிகமிக குறைந்த மாதத்தில் பிறந்த இரட்டையரான அடியா லாய்லின் மற்றும் ஆட்ரில் லூக்கா நடராஜா இருவரும் பல்வேறு சவால்கள் மற்றும் சிகிச்சைகளைக் கடந்து தற்போது தங்கள் முதல் பிறந்தநாளை கண்டுள்ளனர். உலகின் மிக குறைமாத குழந்தைகள் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளனர் இந்த இரட்டையர்.
கனடாவின் ஓண்டாரியோ மாகாணத்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி தம்பதி நடராஜா - ஷெகினா ராஜேந்திரம். இவர்களுக்கு கடந்த ஆண்டு மார்ச் 4ஆம் தேதி இரட்டை குழந்தைகள் பிறந்தன. இரட்டையர்கள் பிறப்பது சாதாரணமானதுதான் என்றாலும், 266 நாட்களுக்கு பிறகு பிறக்கவேண்டிய குழந்தைகள் 152 நாட்களிலேயே பிறந்ததுதான் இங்கு மருத்துவர்கள் மற்றும் பெற்றோருக்கு சவாலாக அமைந்தது. ஆனால் இவர்கள் “உலகிலேயே மிகமிக குறைந்த மாதத்தில் பிறந்த இரட்டையர்” மற்றும் மிகவும் லேசான(எடை குறைந்த) குழந்தைகள் என்ற ரெக்கார்டை பதிவு செய்துள்ளனர்.
கர்ப்பந்தரித்த 21 வாரங்கள் மற்றும் 5 நாட்களிலேயே ஷெகினாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தைகள் பிழைப்பதற்கான சாத்தியக்கூறுகள் 0% தான் இருப்பதாக கூறிவிட்டதாக கின்னஸ் உலக சாதனையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் முந்தைய சாதனையான கீலே மற்றும் காம்ப்ரி எவோல்டின் சாதனையை முறியடித்துள்ளனர்.
420 கிராம் எடையுடைய ஆட்ரிலின் பிறப்பதற்கு 23 நிமிடங்கள் முன்பு பிறந்த ஆடிலா வெறும் 330 கிராம் எடையுடன் பிறந்துள்ளார். இவர்கள் இருவரும் சேர்த்தே மொத்தம் 750கிராம் எடையுடன் மட்டுமே பிறந்துள்ளனர். இவர்கள்தான் இதுவரை பிறந்த இரட்டையர்களில் மிகவும் எடை குறைவானவர்கள் என்ற சாதனையையும் படைத்துள்ளனர்.
டொராண்டோவில் உள்ள மவுண்ட் சினாய் மருத்துவமனையில் பிறந்த இரட்டையர் இருவரும் கிட்டத்தட்ட 6 மாதங்கள் மருத்துவமனையில் கண்காணிப்பிலேயே வைக்கப்பட்டிருந்தனர். மூளை ரத்தக்கசிவு, திரவ சமநிலையின்மை, செப்சிஸ் மற்றும் மூச்சுப்பிரச்னை போன்ற பல்வேறு சவால்களை சந்திக்கவேண்டி இருந்தது. 22 வாரங்களில் பிறந்த இந்த இரட்டையர் ஒரு மணிநேரத்திற்கு முன்பாக பிறந்திருந்தாலும்கூட அவர்களை காப்பாற்றுவதற்கு எந்த முயற்சியும் எடுக்கப்பட்டிருக்காது என்று இரட்டையர் குறித்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஷெகினா கூறுகையில், அடிலா மிகவும் ஆரோக்கியமாக வளர்ந்துவருகிறாள். ஆனால் தொற்று மற்றும் சுவாசமண்டல பிரச்னை காரணமாக அட்ரிலை இரண்டுமுறை மருத்துவமனையில் அட்மிட் செய்யவேண்டி இருந்தது என்கிறார்.