உலக சுற்றுச்சூழல் தினம் இன்று அனுசரிக்கப்படுகிற நிலையில், கொரோனா தொற்றால் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் நாம், எதற்காக சுற்றுச்சூழல் தினத்தை கொண்டாட வேண்டும் என்பது பற்றியும், நவீன தொழில்நுட்ப உலகில் சுற்றுசூழலை பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும் இந்தக் கட்டுரை வழியாக தெரிந்துக்கொள்ளலாம்.
நிலம், நீர், நெருப்பு, வளி, வெளி ஆகிய ஐவ்வகை பஞ்சபூதங்களும் வேதிவினை புரிந்து பல கோடி ஆண்டுகளாக உருவாக்கியது தான் இந்த பூமி பந்து. பிரபஞ்சத்தில் எத்தனையோ கோள்கள் இருந்தாலும், இயற்கை அன்னை புவியில் விஸ்தரித்துள்ள சுற்றுச்சூழல் அமைப்பு
பல்லயிரக்கணக்கான உயிர்களின் வசிப்பிடமாக புவி திகழ்வதற்கு காரணமாக உள்ளது. 18ம் நூற்றாண்டில் ஏற்பட்ட தொழில் புரட்சியின் காரணமாக தொழிற்சாலைகள் பெருகின.
அத்தோடு மாசுபாடுகளும் பெருகின. இயற்கையின் வளங்கள் வியாபார நோக்கமாக பார்க்கப்பட தொடங்கின. இதனால் விவசாய புரட்சியின் போது இயற்கை சூழலோடு வாழ்க்கையை நகர்த்திய மனித குலம், அறிவியல் புரட்சியில் ஏக்கர் கணக்கில் காடுகளையும், உயிரினங்களையும் அழிக்க தொடங்கியது. இதன் எதிர்வினைகளை அடுத்தடுத்து நிகழ்ந்த இயற்கை சீற்றங்கள் ஊரஞ்ஜிதப்படுத்தின.
இதனால், புவிக்கோளையும், அதன் இயற்கையையும் காப்பாற்றும் வகையில், சுற்றுச்சூழல் செயல்பாடு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த 1972 முதல் ஐக்கிய நாடுகள் சபையால் ஆண்டு தோறும் ஜூன் 5-ந் தேதி ‘உலக சுற்றுச்சூழல் தினம்’ கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஐநா சபையின் சார்பில் இந்நாளின் கொண்டாட்டங்களுக்குப் பொறுப்பாக ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம் செயல்படுகின்றது. உலகிலுள்ள நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் இது தொடர்பான நிகழ்வுகள் நடைபெற்றாலும், ஒவ்வோர் ஆண்டிலும், முதன்மைக் கொண்டாட்டத்துக்கான இடமாக ஒரு இடம் தேர்வு செய்யப்படுவது வழக்கமான ஒன்றாக இருக்கிறது.
அதன் படி இந்த வருடம் சுற்றுச்சூழல் அமைப்பு & மறுசீரமைப்பு (Ecosystem Restoration) என்ற தலைப்பை மையாக வைத்து, நமது சகோதர தேசமான பாகிஸ்தான் முன்னின்று நடத்தும் பொறுப்பை ஏற்றுருக்கிறது. ஒவ்வொரு மூன்று வினாடிகளுக்கு ஒரு முறையும், புவியில் ஒரு கால் பந்து மைதான அளவிற்கு காடுகள் அழிக்கப்படுவதாக ஐநா சபையின் சுற்று சூழல் அமைப்பு தெரிவிக்கிறது. இதுவரை மனிதர்கள் ஏற்படுத்தியுள்ள சுற்றுச்சூழல் மாசுபாட்டினால் 50% பவள பாறைகளின் பரவல் குறைந்துள்ள நிலையில், இதே நிலை நீடித்தால் 2050க்குள் 90% பவள பாறைகளை இழக்கும் சூழல் ஏற்படும் அபாயம் உள்ளது.
அதாவது பவள பாறைகளின் பரவல் குறைவது என்பது கடல் பரப்பின் வெப்பநிலை அதிகரிப்பதை குறிக்கிறது. 2050ல் புவியின் வெப்பநிலை 1.5°செல்சியஸ் உயரும் என ஐநா சபையின் சுற்றுச்சூழல் அமைப்பு எச்சரித்துள்ளது. இதனால் தான், இழந்த இயற்கை வளங்களை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக கூறி சுற்றுச்சூழல் அமைப்பு & மறுசீரமைப்பு என்கிற தலைப்பு பிரதான படுத்தப்பட்டுள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் காற்று மாசுபாடு, நீர் மாசுபாடு முக்கிய சுற்றுச்சூழல் பாதிப்பாக உருவெடுத்துள்ளது. காடுகள் அழிப்பு, தொழிற்சாலைகளினால் ஏற்படும் மாசுபாடு இவற்றால் பல்லுயிர் பெருக்கம் தடுக்கப்பட்டு சுற்றுசூழல் அமைப்பிற்கே பாதிப்பு ஏற்படுகிறது.
இதனால் பருவநிலை மாற்றம், இயற்கை பேரிடர்கள், பனி பாறை உருகுதல் அதிகமாகி உலகில் நிசப்தமற்ற சூழல் நிலவுகிறது. தற்போது பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா போன்ற தொற்று வைரஸ்கள், பிற உயிரினங்களிடம் இருந்து மனிதருக்கு பரவுவதற்கு காரணம் அதன் வசிப்பிடத்தை நாம் தனதாக்கி கொண்டது தான் காரணம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் காற்றில் கார்பன் அளவை குறைப்பதாக உலக நாடுகள் கையப்பம் இட்டாலும், கிரிட்டா தன் பெர்க் போன்ற புரட்சிகர மாணவர்கள் வருங்காலத்திற்கு எங்களுக்கு என்ன மிச்சம் வைத்து போக போகிறீர்கள் என கேள்வி கேட்கிறார்கள்.
மரம் நடுவது, காடுகள் வளர்ப்பது, மரபு சாரா ஆற்றல் மூலங்களை பயன்படுத்துவது, சுத்திகரிக்கப்பட்ட தொழிற்சாலை கழிவுகளை வெளியேற்றுவது, அதிக மாசுபாட்டை உண்டாக்கும் திட்டங்களை கைவிடுவது இவற்றால் மட்டுமே சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் மறுசீரமைப்பு செய்யவும் முடியும். எனவே உலக சுற்று சூழல் தினத்திற்கான மாற்றத்தை நம்மிலிருந்தே தொடங்குவோம், மரம் நடுவோம், சூழலியல் அறம் காப்போம்.
- ந.பால வெற்றிவேல்