உலக ரத்ததானம் தினம் இன்று..!

உலக ரத்ததானம் தினம் இன்று..!
உலக ரத்ததானம் தினம் இன்று..!
Published on

ஆண்டுதோறும் ஜூன் 14  தேதி உலக ரத்ததான தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. 

ரத்ததானம் தொடர்பான விழிப்புணர்வு பெருமளவு அதிகரித்திருந்தாலும், அதன் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவே மருத்துவர்கள் கூறுகின்றனர். ரத்தத்திலிருந்து பிரிக்கப்படும் செல்கள் பல்வேறு கொடிய நோய்களுக்கும் தீர்வாக அமைவதால், ரத்தத்தை சேமிக்கும் ரத்த வங்கிகள் நவீன மருத்துவத்துறையின் வரப் பிரசாதமாக பார்க்கப்படுகிறது. நோய்களை குணப்படுத்த பெரிதும் உதவும் ரத்த வங்கிகள், ரத்தத்தை நான்கு வகைகளாக பிரித்து சேகரித்து வருகின்றன. வருடத்திற்கு நான்கு முறை ரத்ததானம் வழங்கலாம் என்று ரத்த வங்கிகள் கூறுகின்றன. 

ரத்த தானம் குறித்து பொதுமக்களிடையே பெருமளவு விழிப்புணர்வு பெற்றிருந்தாலும், அதற்கேற்ப தேவையும் அதிகரித்தே வருவதாக கூறுகின்றார் கோவை அரசு  மருத்துவக்கல்லூரி டீன் அசோகன். மேலும் நவீன தொழில்நுட்பத்தின் உதவியால் ரத்தத்தை சேமிக்கும் திறன் மட்டுமின்றி, அதில் உள்ள செல்களை பிரித்து பாதுகாத்து மருத்துவத்திற்கும் பயன்படுத்தும் வழிமுறைகளும் உருவாக்கப்பட்டுள்ளதால், கொடையாளிகளால் வழங்கப்படும் ரத்தம் மகப்பேறு காலங்கள், ரத்த புற்றுநோய், டெங்கு உள்ளிட்ட பல நோய்களுக்கு தீர்வாக அமைகிறது. ரத்தத்திலிருந்து பிளாஸ்மா, பிளேட்லெட்ஸ், பேக் செட்ஸ், கிராயோ என நான்கு வகைகளில் செல்கள் பிரித்து எடுக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. பெரும்பாலும், 10 சதவிகித மட்டுமே முழு ரத்தமாகவும், 90 சதவிகிதம் ரத்தத்திலிருந்து செல்கள் பிரிக்கப்பட்டு பாதுகாக்கப்படும் தொழில்நுட்பம் அசுர வளர்ச்சியை அடைந்துள்ளதால், ரத்தத்தின் தேவை எப்போதும் அதிகரித்துக்கொண்டே உள்ளதாக கூறுகின்றார் அசோகன். 

ரத்த தானம் செய்வதால் பலன் பெறுவது மற்றவர் மட்டுமல்ல நாமும்தான். உடலில் இயற்கையாக புதிய ரத்தம் உற்பத்தியாகும். ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு சீராக இருக்க உதவும். உடலில் அதிகளவில் உள்ள இரும்புச்சத்து சமன் செய்யப்படும். பல கொடிய நோய்களுக்கு தீர்வாகவும் இது அமைக்கிறது. நாம் கொடுக்கும் ரத்தம் அப்போதைய தேவைக்கு இல்லாத நிலையில், ரத்த வங்கிகள் மூலம் சேமித்து வைக்கப்பட்டு பிற்காலத்தில் பயன்படுத்த முடியும் என்பதால் இளைஞர்கள் ரத்த தானம் தர முன்வர வேண்டும் என்கின்றனர் ரத்த கொடையாளிகள். 

45 கிலோவுக்கு மேல், 18 முதல் 60  வயது வரை உள்ள அனைவரும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை என வருடத்திற்கு நான்கு முறை ரத்த தானம் செய்யலாம். புகை மற்றும் மது அருந்தி இருந்தால் அவர்கள் உட்கொண்ட 24 மணி நேரத்திற்கு பிறகே ரத்த தானம் செய்ய முடியும். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com