உக்ரைனில் உள்ள இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாக தாயகத்திற்கு அனுப்பப்படுவார்கள் என உக்ரைனில் உள்ள இந்திய தூதர் தெரிவித்துள்ளார்
உக்ரைன் தலைநகர் கீவில் பேசிய இந்திய தூதர் பார்த்தா சத்பதி, `இந்தியர்களை தாயகம் அனுப்புவதற்காக விரிவான திட்டம் வகுக்கப்பட்டு, அவற்றை அதிகாரிகள் செயல்படுத்த தொடங்கியுள்ளனர்’ என தெரிவித்துள்ளார். உக்ரைனில் பதற்றம் நிலவும் நிலையில் அங்குள்ள இந்தியர்கள் அருகிலுள்ள நாடுகளுக்கு அனுப்பப்பட்டு, பின் அங்கிருந்து தாயகத்திற்கு விமானம் மூலம் அவர்கள் அனுப்பப்படுவார்கள் என பார்த்தா சத்பதி தெரிவித்திருக்கிறார்.
இதில் முதல் கட்டமாக 470 இந்திய மாணவர்கள் உக்ரைனிலிருந்து அதன் பக்கத்து நாடான ருமேனியா சென்று, பின் அங்கிருந்து தாயகத்திற்கு புறப்பட உள்ளதாக பார்த்தா சத்பதி தெரிவித்தார். இவர்களை அழைத்து வர டெல்லியிலிருந்து இன்று 2 ஏர் இந்தியா விமானங்கள் ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டுக்கும் ருமேனிய தலைநகர் புகாரெஸ்ட்டுக்கும் செல்ல உள்ளதாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. உக்ரைனிலிருந்து இந்தியர்களை அழைத்து வரை தாங்களும் உதவ தயார் நிலையில் உள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது. இதற்கிடையே பேசிய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷவர்தன் ஸ்ரிங்லா, உக்ரைனில் 20,000 இந்தியர்கள் உள்ள நிலையில் அதில் 4,000 பேர் கடந்த சில நாட்களுக்கு முன் தாயகம் திரும்பியதாக தெரிவித்தார்.
இதில் தமிழகத்திலிருந்து 5,000 பேர் உள்ள நிலையில் குஜராத் மற்றும் கேரளாவிலிருந்து தலா 2,500 பேரும் ஹரியானாவிலிருந்து 2,000 பேரும் உக்ரைனில் உள்ளதாக தெரியவந்துள்ளது. மகாராஷ்டிராவிலிருந்து 1,200 பேரும் சட்டீஸ்கரிலிருந்து 100 பேரும் உக்ரைனில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.