இந்தோனேஷிய தலைநகர் ஜகாத்தா சர்வதேச விமான நிலையத்தில், நிறுத்தப்பட்டிருந்த டிரான்ஸ்நுசா ஏர்பஸ் ஏ320 என்ற விமானத்தை ஆய்வு செய்வதற்காக, விமான நிறுவன ஊழியர் ஒருவர் உள்ளே சென்றுள்ளார். பின்னர், அவர் ஆய்வை முடித்துவிட்டு இறங்க முயன்றுள்ளார். ஆனால் அவர் உள்ளே இருப்பதைக் கவனிக்காத பிற ஊழியர்கள், இறங்குவதற்கு வைக்கப்பட்டிருந்த படிக்கட்டை அங்கிருந்து அகற்றியுள்ளனர். அந்த ஊழியர் விமானத்தின் கதவை திறந்து படிக்கட்டில் கால்வைத்தபோது, படிக்கட்டு நகர்ந்ததால் நொடிப்பொழுதில் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வீடியோவைப் பார்க்கும் நெட்டிசன்கள் பலரும், ‘விமான கதவு மூடப்படுவதற்கு முன்பே ஏணியை ஊழியர்கள் அகற்றியது தவறு எனவும், இது மிகப்பெரிய அலட்சியத்தைக் காட்டுகிறது’ எனவும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.