மெக்சிகோவில் கடந்த ஜூன் 3ஆம் தேதி ஹிடால்கோ அருகே நீராவி இயந்திரத்துடன் கூடிய ’பேரரசி’ என்று அழைக்கப்படக்கூடிய பழங்கால ரயில் சென்றது. அதாவது, கனேடிய பசிபிக் கன்சாஸ் சிட்டியை (CPKC) உருவாக்கிய நட்புரீதியான இணைப்பைக் கொண்டாடும் விதமாக, 1930இல் உருவாக்கப்பட்ட ஒரு நீராவி இன்ஜின் ரயில் ஒன்று கால்கரியில் இருந்து புறப்பாட்டு கனடா, அமெரிக்கா வழியாக மெக்சிகோவைச் சென்றடையுமாம். கடந்த ஏப்ரல் மாதம் புறப்பட்ட இந்த ரயில், நாளை மெக்சிகோவில் தன் பயணத்தை நிறைவு செய்யும். பின்னர் இந்த ரயில், ஜூலை மாதம் கனடா திரும்பும். அத்துடன் அங்கு அது ஓய்வு பெறும்.
அந்த ரயிலை புகைப்படம் எடுப்பதற்காகப் பலரும் ஹிடால்கோ அருகே கூடினர். ரயில் வருவதை அவர்கள் தங்களுடைய செல்போனிலும் படம் பிடித்தனர். அதில் இளம்பெண் ரயிலை ஒட்டி செல்பி எடுத்தார். அப்போது ரயில் மோதியதில் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இறந்த போன அந்தப் பெண்ணுக்கு 20 வயது இருக்கும் என்றும், அவருக்கு அருகிலேயே அவருடைய மகனும் உடன் இருந்ததாக அந்தக் காட்சியை வேடிக்கை பார்த்தவர்கள் கூறியிருக்கிறார்கள்.
இதுகுறித்து கனடிய பசிபிக் கன்சாஸ் சிட்டி (CPKC) நிறுவனம், “இந்த சம்பவத்திற்கு வருந்துவதுடன், முழு விசாரணைக்கு காவல் துறையுடன் ஒத்துழைக்க விரும்புகிறது. எனினும், ரயில் கடந்து செல்வதைப் பார்க்க விரும்பும் மக்கள், தண்டவாளத்திலிருந்து குறைந்தது 10 மீட்டர் தொலைவில் இருக்க வேண்டும். ஆனால், அவரோ செல்பி மோகத்தில் அவரோ ரயிலுக்கு மிக அருகில் வந்ததே விபத்துக்குக் காரணம்” எனத் தெரிவித்துள்ளது.