மும்பையை சேர்ந்த 70 வயது மூதாட்டியொருவர், கடந்த 20 வருடங்களுக்கு முன்பு காணாமல் போயுள்ளார். இவர் தற்போது சமூக வலைதள உதவியால் பாகிஸ்தானில் கண்டறியப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள ஹைதராபாத் என்ற பகுதியில் வசிக்கும் ஹமிதா பானோ, கடந்த 2002 ஆம் ஆண்டு துபாய்க்கு வீட்டுவேலையொன்றில் பணிபுரிவதற்காக மும்பையை விட்டு வெளியேறியுள்ளார். இதன் பின்னர் இப்போதுதான் இவருடைய இருப்பிடம் இவரது குடும்பத்தினருக்கு கண்டறியப்பட்டிருக்கிறது.
எதார்த்தமாக சில தினங்களுக்கு முன் ஹமிதா, தன் நிலை குறித்து சமூக ஆர்வலர் ஒருவரிடம் பேசியுள்ளார். அந்த சமூக ஆர்வலரிடம் ஹமிதா பேசுகையில், `என்னை வீட்டு வேலை செய்ய வைப்பதாக ஏஜென்சியொன்றை சேர்ந்தவர்கள் அழைத்து வந்தனர். வந்தவர்கள், என்னை ஏமாற்றிவிட்டார்கள். துபாயிலிருந்து பாகிஸ்தான் வந்து, அப்படியே தங்கிவிட்டேன்’ என வேதனையுடன் கூறியுள்ளார். தன் கணவர் இறந்துவிட்டதாக கூறும் இவர், ஏற்கெனவே வீட்டு வேலைக்காக கதாரில் சில காலம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதைக்கேட்ட அந்த சமூக ஆர்வலர், அவரை வீடியோ எடுத்து அங்குள்ள பிரபல யூ-ட்யூப் சேனல் ஒன்றில் பகிர வைத்திருக்கிறார்.
அந்த யூ-ட்யூப் சேனல் வீடியோவை பார்த்த ஹமிதாவின் மகள் யாஸ்மின், யூட்யூப் சேனலை தொடர்பு கொண்டிருக்கிறார். `என் அம்மா எங்கே இருக்கிறார் என்றே தெரியாமல் 20 வருடங்களாக இருந்தேன். அம்மா வெளிநாடு சென்ற பிறகு, எங்களால் அந்த ஏஜென்சியை சேர்ந்தவர்களையும் தொடர்பு கொள்ள இயலவில்லை. தற்போது அம்மா உயிருடன் பாதுகாப்பாக இருக்கிறார் என கேள்வியுற்றதில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. இந்திய அரசு, என் அம்மாவை துபாயிலிருந்து மீட்டு இங்கு அழைத்து வர உதவ வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்’ என்றுள்ளார் நெகிழ்ச்சியாக.
விரைவில் ஹமிதா அரசு உதவியுடன் இந்தியா வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமூக வலைதளம் மூலம் இணைந்துள்ள இந்த தாய் - மகள் உறவு, தற்போது நெட்டிசன்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.