வேலையில் சேருவதற்கு முன்பே 452 ஃப்ரெஷர்களை பணிநீக்கம் செய்து விப்ரோ நிறுவனம் அதிரடி காட்டியிருக்கிறது.
உலகளவில் ஐடி மற்றும் பிற நிறுவனங்கள் பல்வேறு காரணங்களை மேற்கோளிட்டு கொத்து கொத்தாக ஊழியர்களை பணிநீக்கம் செய்துவருகிறது. மெட்டா, அமேசான், மைக்ரோசாப்ட் மற்றும் ட்விட்டர் உள்ளிட்ட நிறுவனங்களில் வரிசையில் தற்போது இணைந்திருக்கிறது விப்ரோ ஐடி நிறுவனம்.
வேலையில் சேருவதற்கு முன்பே 452 ஃப்ரெஷர்களை விப்ரோ நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது. ஜனவரி 20ஆம் தேதி இந்த தகவலை உறுதி செய்துள்ளது ஐடி மேஜர். “பயிற்சிக்கு பிறகும் மோசமான மதிப்பீட்டிலேயே வேலைசெய்ததாகக் கூறி” பணிநீக்கம் செய்துள்ளது. ”உயர்ந்த தரத்தில் நம்மை வைத்திருப்பதில் விப்ரோ பெருமைகொள்கிறது. நிறுவனத்தின் தரநிலைகளுக்கு இணைங்க நம்மை அமைத்துக்கொள்வதையே விப்ரோ நோக்கமாக கொண்டிருக்கிறது. நிறுவனத்துக்குள் நுழையும் ஒவ்வொரு ஊழியரும் அவர்களுக்கென்று நியமிக்கப்பட்ட வேலைக்கென ஒரு குறிப்பிட்ட அளவிலான நிபுணத்துவத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று விப்ரோ தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.
மேலும், விப்ரோ சில மதிப்பீடுகளை உள்ளடக்கியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், “நிறுவனத்தின் உற்பத்தி மற்றும் வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப ஊழியர்களை நியமிக்கவேண்டும். இதற்கான முறையான மற்றும் விரிவான வழிகாட்டுதல் மற்றும் மறுபயிற்சி அளிக்கப்பட்டாலும் சில சந்தர்ப்பங்களில் நிறுவனத்திலிருந்து ஊழியர்களை அனுப்பவேண்டிய சூழல் ஏற்படுகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது. பணிநீக்கம் செய்யப்பட்ட ஃப்ரெஷர்களின் பயிற்சிக்கு செலவழிக்கப்பட்ட ரூ. 75,000 தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.
2021ஆம் ஆண்டின் இறுதியில் கூகுள் சுமார் 1.56 லட்சம் பேரை வேலைக்கு அமர்த்தியது குறிப்பிடத்தக்கது. பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்திடம் தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில், நிறுவனத்தின் சராசரி சம்பளம் $2,95,884 என்று தெரியவந்துள்ளது. இந்நிலையில் ஓரிரு நாட்களுக்கு முன்பு பணிநீக்க அறிவிப்பை அறிவித்துள்ளது கூகுள் தொழில்நுட்ப நிறுவனம்.
இந்த அறிவிப்பை தொடர்ந்து, மெட்டா, அமேசான், மைக்ரோசாப்ட் மற்றும் ட்விட்டர் உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனங்களோடு, வேலையாட்களை வெளியேற்றிய பட்டியலில் இணைந்துள்ளது கூகுள். முன்னதாக மெட்டா சிஇஒ மார்க் ஜுக்கர்பெர்க், மெட்டா நிறுவனம் தனது பணியாளர்களில் 13% அல்லது சுமார் 11,000 பேரை குறைக்கும் என்று அறிவித்தார். அதேபோல டிவிட்டரை எலோன் மஸ்க் கைப்பற்றியதிலிருந்து, டிவிட்டர் அதன் 7,500 பணியாளர்களில் 50% க்கும் அதிகமானவர்களைக் குறைத்துள்ளது. அதேபோல் அமேசான் 18,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும் மைக்ரோசாப்ட் நிறுவனமும் 2023 நிதியாண்டின் முடிவில், $1 பில்லியன் செலவை மிச்சப்படுத்தும் முயற்சியில் 10,000 அல்லது கிட்டத்தட்ட 5% பணியாளர்களைக் குறைக்க திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.