வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் முதல் முறையாக சீனாவுக்கு ரகசிய பயணம் மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தொடர்ந்து அணு ஆயுத சோதனை நடத்தி வருவதற்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அதன் காரணமாக அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, தென்கொரியா முயற்சியால் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை, வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் அடுத்த மாதம் சந்திக்க உள்ளார். இந்நிலையில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் முதல் முறையாக சீன அதிபர் ஸீ ஜின்பிங்கை சந்திக்க பெய்ஜிங்கிற்கு ரகசிய பயணம் மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுதொடர்பாக ஜப்பான் செய்தி நிறுவனம் க்யோடோ வெளியிட்டுள்ள செய்தியில், வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் ரகசியமாக சீனா வந்ததாகவும், அதிபராக பெறுப்பேற்ற பின்னர் நாட்டை விட்டு வெளியேறாதவர் முதல் முறையாக சீனா சென்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. கிம் வருகையை முன்னிட்டு முன்கூட்டியே ரயில்கள் மூலம் பாதுகாப்பு படையினர் பெய்ஜிங் நகர முழுவதும் குவிக்கப்பட்டிருந்ததாக ஜப்பான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. வடகொரிய அதிபர் கிம், சீன அதிபர் ஸீ ஜின்பிங்கை சந்திப்பதற்கான சாத்தியம் இருப்பதாகவும், அதை தற்போது உறுதிப்படுத்த முடியாது என சீன ராணுவம் தெரிவித்துள்ளது.