ராணுவ உடையணிந்தவர்களே மியான்மரை நீண்ட காலமாக ஆட்சி செய்திருக்கிறார்கள். இப்போதும் புதிய ஆட்சியைத் தொடங்கியிருக்கிறார்கள்.
இன்றைய மியான்மரைப் பற்றிப் புரிந்து கொள்ள வேண்டுமானால் மியான்மர் ராணுவத்தின் தலைமைத் தளபதி மின் ஆங் லேங்கை பற்றி தெரிந்திருக்க வேண்டும். மணிரத்னம் படத்தில் வரும் பாத்திரங்களைப்போல கொஞ்சமாகப் பேசுபவர். பெரும்பாலும் ராணுவத்தின் பின்னணியில் இருந்து செயல்பட்டவர். 2011-ஆம் ஆண்டு ராணுவ ஆட்சியில் இருந்து மக்களாட்சி மாறும் பணிகளைச் செய்தவர் இவர்தான். 2015-ஆம் ஆண்டு தேர்தலில் வென்று ஆங் சான் சூச்சி நாட்டின் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபோது, அவருக்கு இணையாக பிரபலமடையைத் தொடங்கினார் மின் ஆங் லேங். ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலமாக மக்களைக் கவரத் தொடங்கினார்.
இவரைப் பற்றித் தொடருவதற்கு முன்பாக மற்றொரு பின்னணியையும் தெரிந்து கொள்ளலாம். 1962-ஆம் ஆண்டில் இருந்து சுமார் 50 ஆண்டுகாலம் மியான்மரை ஆட்சி செய்திருக்கிறது ராணுவம். பத்தாண்டுகளுக்கு முன்பு ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்தபோதுகூட, ஜனநாயகத்தின் கையில் முழுமையாக அதிகாரங்கள் ஒப்படைக்கப்படவில்லை.
ஜனநாயகம் கோரிப் போராடிய ஆங் சான் சூச்சி போன்றவர்கள், ஓரளவு அதிகாரம் கிடைக்கும் என்பதற்காக, எங்கும் கேள்விப்பட்டிராத ஒரு உடன்பாட்டுக்கு ஒப்புக் கொண்டார்கள். அந்த உடன்பாட்டின்படி நாடாளுமன்றத்தில் மூன்றில் ஒருபங்கு இடங்களை நிரப்பும் பொறுப்பு ராணுவத்துக்கு தரப்பட்டது. பாதுகாப்பு, உள்துறை, எல்லை விவகாரத்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளில் அமைச்சர்களாக ராணுவத்தினரே நியமிக்கப்பட்டு வந்தார்கள். அதனால் ஜனநாயக ஆட்சியின் பிடியை எப்போதும் ராணுவமே தந்திரமாக வைத்துக் கொண்டிருந்தது.
இந்தப் பிடியை விட்டுத் தருவதற்கு ராணுவத் தளபதியான மின் ஆங் லேங் ஒருபோதும் சம்மதிக்கவில்லை. 2016-ஆம் ஆண்டில் யாரும் எதிர்பார்க்காத வகையில் தமக்குத்தாமே பதவி நீட்டிப்பை வழங்கிக் கொண்டார்.
கடந்த நவம்பரில் நடந்த தேர்தலில் ராணுவ ஆதரவுக் கட்சி தோற்றுப் போனதும், முடிவுகளை ஏற்க முடியாது என முழங்கினார். இவை எல்லாம் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான படிப்படியான நடவடிக்கைதான் என்பது ஆங் சான் சூச்சியைக் கைது செய்தபோதுதான் வெளி உலகுக்குத் தெரியவந்தது.