பல எதிர்ப்புகளுக்கு இடையே பல லட்சம் கோடி செலவில் நடைபெறும் கால்பந்து உலகக் கோப்பை குறித்து சிறு தொகுப்பை இங்கு காணலாம்.
விளையாட்டு மதம், இனம், தேசம் கடந்த ஒரு உணர்வு. உலகின் அதிக நாடுகளில் விளையாடக்கூடிய ஒரு விளையாட்டாகவும், அதிக ரசிகர்களை கொண்ட ஒரு விளையாட்டாகவும் இருப்பது கால்பந்துதான். கால்பந்து விளையாட்டை பொறுத்தவரை உலகக் கோப்பை, கோப்பா அமெரிக்கா, euro போன்ற தொடர்களுக்காக மட்டுமே வீரர்கள் தங்களுடைய நாடுகளுக்காக விளையாடுகின்றனர். மற்ற நேரங்களில் கிளப் அணிகளுக்காக மட்டுமே விளையாடுகின்றனர் என ஆயிரம் விமர்சனங்கள் எழுந்தாலும், ஒலிம்பிக் போட்டியின் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் எதிர்பார்ப்பு எவ்வளவோ, அதேபோல்தான் கால்பந்து உலகக்கோப்பை பார்க்கப்படுகிறது.
குறிப்பாக ஒவ்வொரு கால்பந்து அணிகளும் தங்கள் நாடுகளின் கலாசாரம் மற்றும் அரசியலை வெளிப்படுத்தும் விதமாகவே விளையாடுகின்றனர் என்பதால் ஐரோப்பிய நாடுகளில் கால்பந்து உலகக் கோப்பைக்கான மவுசு என்றும் அதிகம்தான்.
இப்படிப்பட்ட கால்பந்து உலகக் கோப்பையை பெரிய அளவில் சம்பந்தம் இல்லாமல், அன்றைய தேதியில் அதற்கான குறைந்தபட்ச கட்டமைப்புகூட இல்லாத கத்தார் நாட்டுக்கு கால்பந்து உலகக் கோப்பையை நடத்தும் வாய்ப்பு கடந்த 2010-ம் ஆண்டு வழங்கப்பட்டது. உலகக் கோப்பை தொடரில் தொடர்ந்து விளையாடி வரும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் இந்த உலக கோப்பையை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்த நேரத்திலும், கத்தார் நாட்டிற்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டதற்கு பல எதிர்ப்புகள் கிளம்பின.
காரணம் கத்தார் நாட்டினர் பல கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்தே உலகக் கோப்பையை நடத்தும் வாய்ப்பை பெற்றுள்ளனர் எனக் கூறப்பட்டது. மனித உரிமை மீறல்கள் நடைபெறும் ஒரு நாட்டில் எப்படி கால்பந்து உலகக் கோப்பை நடத்த அனுமதி வழங்கப்பட்டது என்பதை கடந்து கத்தார் நாட்டில் உலகக் கோப்பையை நவம்பர் - டிசம்பர் மாதத்தில் மட்டுமே நடத்த முடியும்.
இப்படி நடந்தால் UEFA நடத்தும் சாம்பியன்ஸ் லீக் தொடர், ஒவ்வொரு ஐரோப்பிய நாடுகளிலும் நடைபெற்று வரும் கால்பந்து தொடர்களில் மாற்றம் செய்யவேண்டிய சூழல் வரும் என பல எதிர்ப்புகள் வந்தன. இன்னும் சொல்லப்போனால் கத்தார் நாட்டில் உலகக் கோப்பை நடத்துவதற்கு ஆதரவாக வாக்களித்த 22 நபர்களில் 16 நபர்கள் வாக்களித்த மூன்று மாதங்களில் தங்களுடைய பதவிகளில் இருந்து ராஜினாமா செய்தனர்.
கத்தார் நாட்டில் உலகக் கோப்பை நடத்துவதற்கு ஒப்புதல் அளித்த அப்போதைய FIFA தலைவர் 17 ஆண்டுகள் தலைவர் பதவியில் இருந்த நிலையில், 5வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருசில நாட்களில் ராஜினாமா செய்த அவர் மீது ஸ்விடசர்லாந்து நாட்டில் முறைகேடாக பணம் பெற்றது உள்ளிட்ட பல வழக்குகளில் விசாரணை நடைபெற்று வருகிறது. அதேபோல் 2015-ம் ஆண்டு FIFA நிர்வாகிகள் 6 நபர்கள் அமெரிக்காவில் முறைகேடாக பணம் கைமாறியது உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள்ள்ளாக்கபட்டனர். இப்படி பல எதிர்ப்புகள் கடந்த 12 ஆண்டுகளில் வந்தாலும் அடுத்த வாரம் உலகக் கோப்பையை நடத்துகிறது கத்தார்.
உலகக் கோப்பை தொடருக்காக ஒரு மைதானம் அமைக்கப்பட்டது என்ற கதைகளை நாம் கேட்டு இருப்போம். ஆனால் ஒரு உலகக் கோப்பை தொடர் நடத்துவதற்காகவே ஒரு நகரம் உருவாகியுள்ளது என்றால் நம்ப முடியுமா?. ஆம், 2022-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடர் நடத்துவதற்காக 220 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் 7 கால்பந்து மைதானங்கள், புதிய விமான நிலையம், புதிய மெட்ரோ, புதிய நெடுஞ்சாலை, புதிய நட்சத்திர விடுதிகள் என கடந்த 10 ஆண்டுகளில் அனைத்து நாடுகளும் ஆச்சரியப்படும் அளவிற்கு ஒரு நகரை கத்தார் நாட்டினர் அமைத்துள்ளனர்.
2010-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்காக தென் ஆப்ரிக்கா 3.6 பில்லியன் டாலரும், 2014-ம் ஆண்டு பிரேசில் 15 பில்லியன் டாலர், 2018-ம் ஆண்டு 11.5 பில்லியன் டாலர்கள் மட்டுமே செலவு செய்யப்பட்ட நிலையில் 2022-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்காக மட்டுமே 220 பில்லியன் டாலர்களை செலவு செய்துள்ளது கத்தார். Natural GAS, எண்ணெய் கிடங்கு, முத்து குவித்தல் போன்றவை மூலம் வருமானத்தை ஈட்டும் கத்தார் நாட்டின் மொத்த ஜனதொகையே வெறும் 2.224 மில்லியன் மட்டுமாக இருக்க, கடந்த 12 ஆண்டுகளில் இந்த கட்டமைப்பு வசதிகள் அனைத்தையும் மேம்படுத்த கிட்டத்தட்ட 20 லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்கள் வங்கதேசம், இந்தியா மற்றும் ஆசியாவின் மற்ற நாடுகளில் இருந்து பணியாளர்களாக அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
வெளிநாடுகளில் இருந்து தங்களுடைய நாடுகளுக்கு வந்த எந்த ஒரு பணியாளர்களுக்கும் சட்டப்பூர்வமாக அவர்களுக்கு வழங்க வேண்டிய சலுகைகளை அரசு வழங்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் கத்தார் நாட்டின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணியில் இருந்த 6500-க்கும் மேற்பட்ட நபர்கள் உயிரிழந்து உள்ளனர் என ஆய்வுகள் வெளியே வந்தாலும், தங்கள் நாட்டிலுள்ள சட்டங்களை வைத்து வெறும் 37 நபர்கள் மட்டுமே உயிரிழந்து உள்ளனர் என கத்தார் நாட்டினர் தெரிவித்தனர்.
இது ஒருபுறம் இருக்க கத்தார் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகவும், எல்.ஜி.பி.டி. சமூகத்துக்கு அங்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இப்படிப்பட்ட ஒரு நாட்டில் ஏன் கால்பந்து உலகக் கோப்பை நடைபெறுகிறது என்ற கேள்வி இன்று வரை நீடிக்கதான் செய்கிறது.
- சந்தான குமார்