பிரான்ஸ் நாட்டிற்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து வருவதால், பாகிஸ்தானிலிருந்து பிரெஞ்சு நாட்டினர் மற்றும் பிரெஞ்சு நிறுவனங்கள் வெளியேறுமாறு அந்நாட்டின் தூதரகம் அறிவுறுத்தியிருக்கிறது. இதன் பின்னணி என்ன என்பது குறித்து சற்றே விரிவாக பார்ப்போம்.
பிரான்ஸ் அரசு வியாழக்கிழமை பாகிஸ்தானில் உள்ள பிரான்ஸ் தூதரகத்துக்கு அவசர மெயில் ஒன்றை அனுப்பியது. "பாகிஸ்தானில் பிரான்ஸ் நலன்களுக்கு கடுமையான அச்சுறுத்தல்கள் இருப்பதால், பிரான்ஸ் நாட்டினரும் பிரெஞ்சு நிறுவனங்களும் தற்காலிகமாக நாட்டை விட்டு வெளியேற அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்பதே அந்த மெயிலின் சாராம்சம்.
கடந்த சில நாட்களாக, பிரான்ஸ் அரசை எதிர்த்து போராட்டங்கள் கடுமையாகி வருவதால் இந்த அறிவுறுத்தலை தனது குடிமக்களுக்கு பிரான்ஸ் அரசு வெளியிட்டிருந்தது. பாகிஸ்தான் எதிர்ப்புக் குழுக்கள் இதுவரை பிரெஞ்சு குடிமக்களை குறிவைத்ததாக எந்த தகவலும் இல்லை என்றாலும், பிரான்ஸ் தூதரகம் இந்த நடவடிக்கை "முன்னெச்சரிக்கை" என்று கூறி உடனடியாக வெளியேற அறிவுறுத்தியது.
பாகிஸ்தானில் உள்ள பிரெஞ்சு தூதரகம் மூடப்படவில்லை. ஆனால் குறைந்த பணியாளர்களுடன் பணியாற்றி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், தனியார் விமானங்கள் மூலம் பிரான்ஸ் நாட்டினர் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
பிரான்ஸை எதிர்த்து போராட்டம் ஏன்?
இந்த திடீர் நடவடிக்கைகளும், தற்போது நடைபெற்று வரும் பாகிஸ்தான் போராட்டங்களும் பின்னணி கடந்த ஆண்டே துவங்கிவிட்டது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸிலிருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள கான்ஃப்ளான்ஸ் செயின்ட் ஹொனோரின் என்ற இடத்தில் அமைந்திருக்கும் பள்ளி ஒன்றில் பணியாற்றி வந்தவர் ஆசிரியர் சாமுவேல் பேட்டி. இவர் கடந்த ஆண்டு டிசம்பர் முகமது நபியின் கேலி சித்திரங்களை தனது வகுப்பில் காட்டியதற்காக, தலைதுண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலைத் தொடர்பாக 17 வயது இளம்பெண் உட்பட மூன்று பேர் கைதுசெய்யப்பட்டனர். இந்த விவகாரம் பிரான்ஸில் மதப் பிரச்சனையாக வெடித்தது. தொடர்ந்து பிரான்ஸில் இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பு அதிகரித்துக்கொண்டே சென்றது. இஸ்லாமிய பெண்ளை சிலர் கத்தியால் குத்திய சம்பவம் போன்று வெறுப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன.
இதே காலகட்டத்தில் ஆசிரியர் சாமுவேல் பேட்டிக்கு நடந்த அஞ்சலிப் பேரணியில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், "பிரான்ஸில் இஸ்லாமிய பயங்கரவாதம் ஒடுக்கப்படும். இனி ஐ.எஸ். பயங்கரவாதிகள் பிரான்ஸில் நிம்மதியாக தூங்க முடியாது" என ஆவேசமாகப் பேசினார்.
மேக்ரானின் பேச்சை அப்போதே பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், சவூதி அரசர் என இஸ்லாமிய நாட்டுத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். ஆனாலும் அதனை கண்டுகொள்ளாத மேக்ரான் அரசு, ஆசிரியர் சாமுவேல் பேட்டியின் சம்பவம் மட்டுமல்ல, கடந்த எட்டு ஆண்டுகளில் 200-க்கும் மேற்பட்ட உயிர்கள் மத பயங்கரவாதத்தால் பறிபோயுள்ளன எனக் கூறி, இஸ்லாமியர்களுக்கு ஒரு புதிய சட்ட மசோதாவை கொண்டு வந்தது.
புதிய சட்டம் சொல்வது என்ன?!
இஸ்லாமிய கோட்பாடுகளை கற்பிக்கும் ரகசிய பள்ளிகளுக்கு தடை, மூன்று வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான வீட்டுப் பள்ளிக்கூடத்துக்கு தடை போன்ற பள்ளி கல்வி சீர்திருத்தங்கள், மசூதிகள் மற்றும் சாமியார்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் ஆன்லைனில் வெறுப்பு பிரச்சாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது இந்த சட்டம். பலதார மணத்துக்கு ஏற்கெனவே தடை இருக்கும் நிலையில், இந்த சட்டம் அதை மேலும் கடுமையாக்குகிறது. அதாவது, பலதார மணம் புரிந்தவர்களின் குடியிருப்பு உரிமை விண்ணப்பங்கள் இந்த சட்டத்தின் மூலம் நிராகரிக்கப்படும்.
மேலும், பெண்களுக்கு கன்னித்தன்மை பரிசோதனை செய்யத் தடை, அதை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும், இதைவிட முக்கியமாக, இஸ்லாமிய அமைப்புகள் இனி நிதி விவகாரங்களில் வெளிப்படத்தன்மையை கடைபிடிக்க வேண்டும் என்று சட்டம் உத்தரவிட்டுள்ளது.
இந்த சட்டத்துக்கு கடுமையான விமர்சனம் வெளிநாட்டிலிருந்து வந்தது. குறிப்பாக பாகிஸ்தானில் இருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பின.
இந்த வார தொடக்கத்தில், பிரான்ஸ் தூதரை வெளியேற்றவும், நாட்டில் பிரெஞ்சு தயாரிப்புகளை தடை செய்யவும் இம்ரான் கான் தலைமையிலான அரசாங்கத்தை கட்டாயப்படுத்தும் நோக்கில் வன்முறைப் போராட்டத்தை கையிலெடுத்து பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-லாபாய்க் கட்சி (டி.எல்.பி). அதன்படி டி.எல்.பி ஆதரவாளர்கள் வீதிகளில் இறங்கி போராடினர். அந்தக் கட்சியின் தலைவரான சாத் ரிஸ்வி வியாழக்கிழமை கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்.
விடுதலை செய்யப்பட்ட உடனேயே பேசியவர், அனைத்து நகரங்களிலும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். இதையடுத்தே போராட்டம் மேலும் தீவிரமடைய இரண்டு போலீஸ் அதிகாரிகள் உட்பட 5 பேர் இறந்தனர். போராட்டத்தை அடக்க தண்ணீர் பீரங்கி, கண்ணீர்ப்புகை மற்றும் ரப்பர் தோட்டாக்கள் பயன்படுத்தப்பட்டன.
பாகிஸ்தானில் டி.எல்.பி எதிர்ப்பு தெரிவிப்பது இது முதல்முறை அல்ல. கடந்த ஆண்டே, பாகிஸ்தான் முழுவதும் இதேபோன்ற வன்முறை போராட்டங்களுக்கு இக்கட்சி தலைமை தாங்கியது. அப்போதே இம்ரான் கான் அரசு டி.எல்.பி உடன் பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தையின் முடிவில் மூன்று மாதங்களில் இந்த விஷயத்தை முடிவு செய்வதாக இம்ரான் கான் அரசு உறுதியளித்து உடன்பாடு ஏற்படுத்திய பின்னர் அந்த நேரத்தில் டி.எல்.பி தனது போராட்டங்களை வாபஸ் பெற்றது.
பிப்ரவரி 2021-இல் அந்த காலக்கெடு நெருங்கிய நிலையில், அரசாங்கம் டி.எல்.பி உடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை செயல்படுத்தவில்லை. மேலும், ஒப்பந்தத்தை செயல்படுத்த முடியாத இயலாமையை வெளிப்படுத்தியது. இதன்பின் ஏப்ரல் 20 வரை இரண்டு மாதங்கள் டி.எல்.பி காலக்கெடு விதித்த நிலையில், இம்ரான் அரசு பிரான்ஸ் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து காலக்கெடு நெருங்குவதை அடுத்தே தற்போது போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகிறது.
டி.எல்.பி-க்கு தடை?
இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அரசுக்கு டி.எல்.பி தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வருகிறது. மேலும், இந்த டி.எல்.பி பயங்கரவாத செயல்களில் ஈடுபடுகிறது என்ற பொதுவான குற்றச்சாட்டும் உண்டு. இதையடுத்தே, பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவது, பொதுச் சொத்துக்களை அழிக்கும் கட்சிகள் இரும்புக் கைகளால் கையாளப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் டி.எல்.பி-க்கு தடை விதிக்க இம்ரான் அரசு பரிசீலித்து வருகிறது எனக் கூறப்படுகிறது. இது தொடர்பான விவாதங்களும் தற்போது பாகிஸ்தானில் அதிகரித்துள்ளன.