உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் பறவைக்காய்ச்சல் குறித்து அதிக விழிப்புடன் இருக்கவேண்டும் என உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தியிருக்கிறது.
உலகம் முழுவதுமே பறவைக் காய்ச்சல் வேகமாக பரவிவருகிறது. குறிப்பாக H5N1 வகை பறவைக் காய்ச்சலானது கவலையை மேலும் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. கம்போடியாவைச் சேர்ந்த 11 வயது சிறுமி H5N1 வகை தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில், உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்திருக்கிறது. கடந்த மாதமே ஈக்வடாரைச் சேர்ந்த சிறுமிக்கு H5N1 வகை தொற்று உறுதியானது. பிப்ரவரி 16ஆம் தேதி தொற்று உறுதியான பிறகு, இருமல், தொண்டை கரகரப்பு போன்ற அறிகுறிகள் மற்றும் 39 டிகிரி செல்சியஸ் காய்ச்சல் பதிவானது. தற்போது கம்போடியாவைச் சேர்ந்த மற்றொரு சிறுமி பறவைக்காய்ச்சலுக்கு பலியாகியுள்ளார். தொடர்ந்து சிறுமியின் 49 வயது தந்தைக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. ஆனாலும் அவருக்கு அறிகுறிகள் தென்படவில்லை.
இந்நிலையில் பறவைக்காய்ச்சல் தொற்றால் மனிதர்களுக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும், உலகளவில் தொற்று வேகமாக பரவி வருவதாகவும் கவலை தெரிவித்திருக்கிறது. குறிப்பாக, H5N1 பறவைக்காய்ச்சல் தொற்று வகைகுறித்து, அனைத்து நாடுகளும் அதிக விழிப்புடன் இருக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.
பொதுவாக மனிதர்களுக்கு பறவைக்காய்ச்சல் மிகவும் அரிதாகவே பரவுகிறது. இருப்பினும், தொற்றால் பாதிக்கப்பட்ட பறவைகளுடன் நேரடி தொடர்பில் இருப்பவர்களுக்கு தொற்று பரவும் வாய்ப்புகள் அதிகம். இருப்பினும் பறவைக்காய்ச்சல் உலகளவில் பரவிவருவதால் மனிதர்கள்முன்னெச்சரிக்கையுடனும் பாதுகாப்பாகவும் இருத்தல் அவசியம்.