கொரோனாவை கட்டுப்படுத்த பல நாடுகள் முழு முயற்சியை எடுக்காமல் மெத்தனப் போக்கை கடைப்பிடித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
சீனாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ், தற்போது 80 நாடுகளில் வேகமாக பரவியதில் 95 ஆயிரம் பேர் நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். சுமார் 3 ஆயிரத்து 200 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் சீனாவைச் சேர்ந்தவர்கள். நோய் தாக்குதல் அதிகரித்து வருவதை அடுத்து, கொரோனா பரவுவதை தடுப்பதற்கான அனைத்து விதமான நடவடிக்கைகளையும் உலக நாடுகள் மிகுந்த பொறுப்புணர்வுடன் மேற்கொள்ள வேண்டும் என உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியிருந்தது.
இந்தச் சூழலில் பல நாடுகள் நோயை கட்டுப்படுத்துவதில் அலட்சியமாக இருப்பதாக உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. ஜெனிவாவில் செய்தியாளர்களை சந்தித்த உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அட்னாம், நோயின் தீவிரத்தை உணராமல் பல நாடுகள் மெத்தனமாக இருந்து வருவதாக குற்றம்சாட்டினார்.
கொரோனா ஒவ்வொரு நாட்டிற்கும் மிகப் பெரிய அச்சுறுத்தல் என்றும், ஏழை, பணக்கார நாடுகள் என பேதமின்றி இந்நோய் பரவி வருவதால், அதை தடுப்பதற்கு அனைத்து வகையிலும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறினார்.