செய்தியாளர்: ரவிக்குமார்
அமெரிக்காவில் அதிபரின் மனைவிக்கு First Lady என்ற கௌரவம் வழங்கப்படுகிறது. முதல் பெண்மணி என்ற இந்த கௌரவம் அளப்பரியது. இதேபோல துணை அதிபரின் மனைவிக்கு இரண்டாம் பெண்மணி என்ற கௌரவமும் இருக்கிறது. இந்த அந்தஸ்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் இடம்பெற்றால், நமக்கு எத்தனை கௌரவமாக இருக்கும்...?
மில்வாக்கி நகரில் நடந்த குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் துணை அதிபர் வேட்பாளராக ஜேம்ஸ் டேவிட் வான்ஸ் தேர்வாகினார். அதிபர் வேட்பாளராக களத்தில் உள்ள டொனால்டு ட்ரம்ப், துணை அதிபர் வேட்பாளரை அறிமுகப்படுத்தினார். அப்போது ஜே.டி. வான்ஸ் தனது மனைவி உஷா ஷிலுகுரியுடன் மேடையில் தோன்றினார். உஷா என்ற பெயரைக் கேட்டதும், இவர் இந்தியரா என்ற ஆர்வமும் கேள்வியும் ஒவ்வொரு இந்தியரின் மனதில் எழுந்தது. உண்மைதான்.
இந்த உஷா ஷிலுகுரி இந்திய வம்சாவளிதான். நம் சகோதர மாநிலமான ஆந்திராதான் இவரது முன்னோர்களின் பூர்விகம். உஷா ஷிலுகுரியின் தந்தை சென்னை ஐஐடியில் பயின்றவர். இங்கிருந்து அமெரிக்காவின் சான் டியாகோவுக்கு குடிபெயர்ந்துள்ளார். உஷா ஷிலுகுரிக்கு கல்வி போதித்தது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம். பயின்றது தத்துவவியல் முதுகலைப் பட்டம். யேல் சட்டப்பள்ளியில் சட்டமும் பயின்றுள்ள உஷா ஷிலுகுரி, அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதிகளான பிரட் கவனாஸ், ஜான் ராபர்ட்ஸ் ஆகியோருக்கு க்ளெர்க்காக பணியாற்றியுள்ளார்.
லாஸ் ஏஞ்சல்ஸ், சான் பிரான்சிஸ்கோ, வாஷிங்டன் ஆகிய நகரங்களில் உள்ள பிரபல நிறுவனங்களில் சட்ட வல்லுநராகவும் ஆலோசகராகவும் பங்களித்துள்ளார். முங்கர், டோல்ஸ் அண்ட் ஆல்சன் நிறுவனத்திலும் பணியாற்றியுள்ளார். உயர்கல்வி, உள்ளாட்சி நிர்வாகம், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளின் வழக்குகளை கையாண்ட உஷா ஷிலுகுரி, தற்போது அந்தப் பதவியைத் துறந்துவிட்டார்.
யேல் சட்டப்பள்ளியில் உஷா பயின்றபோது, அங்கு நடந்த ஒரு கருத்தரங்கில் பங்கேற்றவர் ஜே.டி.வான்ஸ். அப்போது இருவருக்கும் மலர்ந்த நட்பு, காதலானது. 2014 ல் வான்ஸை மணந்து கொண்டு இல்லத்தரசி ஆகியுள்ளார் உஷா ஷிலுகுரி.
இவர்களின் திருமணம் இந்திய மரபுப்படியே நடந்துள்ளது. இந்தத் தம்பதிக்கு ஈவன், விவேக் என 2 மகன்களும் மிராபெல் என்ற மகளும் உள்ளனர். "ஆயிரம் பக்கங்கள் கொண்ட புத்தகத்தை படிக்க, என் மனைவிக்கு சில மணி நேரங்களே போதும்" என்று, ஜே. டி.வான்ஸ் பெருமைபடப் பேசியதில் இருந்தே, உஷா ஷிலுகுரியின் மதிநுட்பத்தை புரிந்து கொள்ளலாம்.