அமெரிக்காவின் 47வது அதிபராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டிருக்கும் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்பால் உலக அரசியல் மிகப்பெரிய அளவில் மாற்றங்களை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான வேலைகள், தற்போதே தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இதன் ஒருபகுதியாக அமெரிக்காவின் சிஐஏ உளவு அமைப்பில் இந்தியர் ஒருவர் நியமிக்கப்பட இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. உலகில் செயல்படும் உளவு அமைப்புகளில் மிகவும் வலிமையான அமெரிக்காவின் சி.ஐ.ஏ. அமைப்பின் தலைவராக குஜராத்தைச் சேர்ந்த காஷ்யப் படேல் நியமிக்கப்பட இருப்பதாக தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.
குஜராத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், நியூயார்க்கில் பிறந்தவர். லண்டன் பல்கலையில் சட்டப்படிப்பு முடித்த இவர், அமெரிக்காவில் பல அரசுரீதியான பணிகளைச் செய்தார். மேலும், வழக்கறிஞராக பல அரசு தொடர்பான வழக்குகளில் வாதாடி உள்ளார். 9 ஆண்டுகள் தனது வாழ்வை நீதிமன்றங்களில் கழித்துள்ள காஷ்யப், நீதித்துறையில் பல்வேறு உயர் பதவிகளை வகித்து முக்கிய நபராகவும் திகழ்ந்தார். அதைத் தொடர்ந்து, ட்ரம்பின் கடந்தகால ஆட்சியில் முக்கிய செயல்திட்டங்களுக்கு படேல் மேற்பார்வையாளராக பணியாற்றி உள்ளார். ட்ரம்பின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் விசுவாசியாகவும் அறியப்படுகிறார்.
முந்தைய ஆட்சியில் பல முக்கியமான உளவு தகவல்கள், உளவுரீதியான முடிவுகளை எடுக்க காஷ்யப், ட்ரம்பிற்கு காரணமாக இருந்தார். குடியரசு கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக படேல் பிரசாரம் மேற்கொண்டார். ட்ரம்புக்குச் சொந்தமான ட்ரூத் சமூக ஊடகத்தில், டெக்னாலஜி பிரிவில் பணியாற்றுகிறார். அமெரிக்காவில் சர்வ வல்லமை பொருந்திய பதவிகளில் சிஐஏ, தலைவர் பதவியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.