அமெரிக்க நாட்டைச் சேர்ந்த க்ளவுடிங் கம்யூட்டிங் நிறுவனமான Snowflakeன் தலைமை நிர்வாக அதிகாரியாக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்ரீதர் ராமசாமி பொறுப்பேற்றுள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்ரீதர் ராமசாமி 1967 ஆம் ஆண்டு திருச்சியில் பிறந்தவர். ஐஐடி மெட்ராஸில் பி டெக் படிப்பை முடித்த அவர் 1989 ஆம் ஆண்டு அமெரிக்காவில் குடியேறினார். அங்கு பிரவுன் பல்கலைக்கழகத்தில் பி ஹெச்டி படிப்பை முடித்தார். தொடர்ந்து பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றிய ஸ்ரீதர் ராமசாமி, கூகுள் நிறுவனத்தில், ஏப்ரல் 2003 ஆம் ஆண்டு முதல் அக்டோபர் 2018 ஆம் ஆண்டு வரை என 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியுள்ளார். மென்பொருள் பொறியாளராக கூகுளில் தனது பயணத்தைத் தொடங்கிய அவர், படிப்படியாக முன்னேறி விளம்பர மற்றும் வணிகப்பிரிவின் மூத்த துணைத்தலைவராக செயல்பட்டார்.
பின்னர் நீவா (Neeva) எனும் நிறுவனம் 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. முன்னாள் கூகுள் நிறுவனத்தின் ஊழியர் விவேக் ரகுநாதனுடன் இணைந்து இந்நிறுவனத்தை உருவாக்கினார் ஸ்ரீதர் ராமசாமி. பின்னர் 2023 ஆம் ஆண்டு அமெரிக்காவை தளமாகக் கொண்ட டேட்டா கிளவுட் நிறுவனமான Snowflake, நீவாவை வாங்கிய பின் அந்த நிறுவனத்தில் பணியாற்ற தொடங்கினார் ஸ்ரீதர் ராமசாமி.
அங்கு Snowflakeன் AI பிரிவின் துணைத்தலைவராக செயல்பட்டார். இந்நிலையில், Snowflakeன் தலைமை நிர்வாக அதிகாரியாக நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்த ஃபிராங்க் ஸ்லூட்மேனுக்கு பிறகு ஸ்ரீதர் ராமசாமி சிஇஓ வாக பொறுப்பேற்றுள்ளார்.
ஸ்ரீதர் ராமசாமி கலிஃபோர்னியாவில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். தனது அலுவல்களுக்கான நேரங்களைத் தவிர, தனது உடலை பராமரிப்பதில் அதிகம் கவனம் செலுத்தும் அவர், அதிக உடற்பயிற்சிகளில் ஈடுபடுவதாக நேர்காணலொன்றில் தெரிவித்துள்ளார்.
உலக அளவில் முன்னணி நிறுவனங்களில் தலைமை நிர்வாக அதிகாரிகளாக செயல்படும் இந்தியர்களின் பட்டியலில் தற்போது ஸ்ரீதர் ராமசாமியும் இணைந்துள்ளார்.