ஒற்றை வாக்கியம்... இந்தியாவில் அதிர்வலை... யார் இந்த ரியானா?

ஒற்றை வாக்கியம்... இந்தியாவில் அதிர்வலை... யார் இந்த ரியானா?
ஒற்றை வாக்கியம்... இந்தியாவில் அதிர்வலை... யார் இந்த ரியானா?
Published on

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக டெல்லி எல்லைகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். குடியரசு தினத்தன்று விவசாயிகள் டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தியபோது வன்முறை வெடித்தது. இது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்து, நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், சர்வதேச அளவில் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் ஒலிக்க தொடங்கியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாப் பாடகி ரியானா, தனது ட்விட்டர் பக்கத்தில் டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டார். டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளில் இணைய சேவை துண்டிக்கப்படுவதாக வெளியான செய்தி ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ரியானா, "இது குறித்து ஏன் நாம் பேசவில்லை?" என்று #FarmersProtest என்ற ஹேஷ்டேக்குடன் கேள்வி எழுப்பியிருந்தார்.

இப்படி சர்வதேச பாப் பாடகி ரியானா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ஒற்றை வாக்கிய ட்வீட்தான் இந்தியாவை உலுக்கிகொண்டிருக்கிறது. அவரது ட்வீட் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டது. அவரைத் தொடர்ந்து சூழலியல் ஆர்வலர் கிரெட்டா தன்பெர்க், மியா கலிஃபா, கமலா ஹாரிஸின் உறவினர் மீனா ஹாரிஸ் உள்ளிட்ட பல வெளிநாட்டு பிரபலங்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். முதலில் பதிவிட்ட ரியானா யார் என்பது குறித்து பார்ப்போம்.

ரியானா யார்?

2003-ஆம் ஆண்டில் இசைத் தயாரிப்பாளர் இவான் ரோஜர்ஸ் மற்றும் கார்ல் ஸ்ட்ரூக்கன் ஆகியவர்கள் மூலம் பாடகியாக அறிமுகமானார் ரியானா. அவர் 15 வயதில் தனது இசை வாழ்க்கையைத் தொடங்கினார். 'மியூசிக் ஆஃப் தி சன்' என்ற அவரது முதல் ஆல்பம் கடந்த 2005-ஆம் ஆண்டு டெஃப் ஜாம் கரங்களால் வெளியிடப்பட்டது. இருப்பினும் அது பெரிய அளவில் பேசப்படவில்லை. பின்னர் 2007-ஆம் ஆண்டு அவர் வெளியிட்ட 'குட் கேர்ள் கான் பேட்' (Good Girl Gone Bad) ஆல்பம்தான் அவருக்கு உரிய அங்கீகாரத்தை பெற்று தந்தது. அன்றுதான் ரியானா வெளியுலகிற்கு அறிமுகமாக தொடங்கினார். அம்ரல்லா ("Umbrella") என்ற பாடலுக்காக ரியானா தனது முதல் கிராமி விருதைப் பெற்றார்.

அடுத்த ஆண்டுகளில், ரேட்டட்ஆர் (Rated R 2009), லவுட் (Loud 2010), டாக் தட் டாக் (Talk That Talk 2011) மற்றும் அனாபோலோஜெடிக் (Unapologetic - 2012) போன்ற வெற்றிகரமான ஆல்பங்களை வெளியிட்டு மக்கள் மனதில் தனக்கான இடத்தை பதிவு பிடித்தார் ரியானா.

32 வயதான ரியானா தனது பாடல்கள் மூலம் பல்வேறு விருதுகளை வாங்கி குவித்துள்ளார். ஒன்பது கிராமி விருதுகள், 13 அமெரிக்க இசை விருதுகள், 12 பில்போர்டு இசை விருதுகள் மற்றும் ஆறு கின்னஸ் உலக சாதனைகள் உட்பட பல விருதுகளை வென்று உலக அளவில் தனக்கான ரசிகர்கள் வட்டாரத்தை உருவாக்கிக்கொண்டார். லண்டனின் O2 அரங்கில் 10 இசை நிகழ்ச்சிகளை நடத்திய முதல் பெண் தனி இசைக்கலைஞர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

பாப் நட்சத்திரமாக அறிமுகமானதிலிருந்து பில்போர்டு ஹாட் 100 தரவரிசையில் 14 நம்பர் 1 ஹிட்ஸ்களை கொடுத்துள்ளார். இந்த தரவரிசையில் 31 டாப் 10 ஹிட்ஸ்களை கொடுத்து தனி முத்திரை பதித்துள்ளார்.

600 மில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.44,07,71,10,000) நிகர மதிப்புடன், 2020 ஆம் ஆண்டின் ஃபோர்ப்ஸின் சுயமாக சம்பாதித்த பணக்கார பெண்கள் (Self-Made Women ) பட்டியலில் இடம்பெற்றுள்ளார் ரியானா.

இசையைத் தவிர, ரியானா நடிப்பிலும் ஆர்வம் கொண்டவர். 2012 ஆம் ஆண்டு வெளியான பேட்டில்ஷிப் (Battleship) என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து வலேரியன் (Valerian) மற்றும் சிட்டி ஆஃப் எ தௌசண்ட் பிளனெட்ஸ் (the City of a Thousand Planets - 2017) மற்றும் ஓஷன்ஸ் 8 (Ocean's 8 - 2018) உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

இது தவிர, தனது லாப நோக்கற்ற அமைப்பான கிளாரா லியோனல் பவுண்டேஷன் (சி.எல்.எஃப்) மூலம் அவர் மனிதநேயப் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

சமூக வலைதளங்களில் ரியானாவுக்கு 81 மில்லியனுக்கும் அதிகமான பேஸ்புக் ஃபாலோயர்கள், 101 மில்லியன் ட்விட்டர் ஃபாலோயர்கள் மற்றும் 90.3 மில்லியன் இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்கள் இருக்கின்றனர்.

இசை, நடிப்பு, மனிதநேய பணிகளைக் கடந்து அவர் ஒரு தொழில்முனைவோராக Fenty Beauty எனப்படும் மேக்அப் பிராண்டின் இணை நிறுவனரும் ரியானாதான்.

விவசாயிகள் போராட்டம் மட்டுமல்ல, சமீபத்திய மியான்மர் நிலவரம் வரை சர்வதேச அளவிலான பிரச்னைகளை கவனிப்பதும், அதுகுறித்த தனது பார்வையைப் பதிவு செய்வதும் ரியானாவின் வழக்கம் என்பது கவனிக்கத்தக்கது.

- மலையரசு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com