PT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்?

PT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்?
PT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்?
Published on

பொருளாதாரத்தில் நல்ல நிலையிலுள்ள நாடுகளுக்கு மட்டும்தான் கொரோனா தடுப்பூசி என்றால், ஏழை நாடுகளின் நிலை என்ன? - ஒரு விரிவான அலசல்.

கொரோனா தடுப்பூசிகளை விநியோகிப்பதில் நாடுகளுக்கிடையே ஏற்றதாழ்வுகள் இருப்பதாகவும், சம அளவில் மருந்துகளை பகிர்ந்து அளிப்பதில் தோல்வியை சந்தித்து வருவதாகவும் கவலை தெரிவித்தார் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம்.

அதிக வருவாய் உள்ள 49 நாடுகளில் 3.90 கோடிக்கும் அதிகமான தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், ஒரு பின்தங்கிய நாட்டில் 25 மருந்துகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலை மாற வேண்டும். ஒவ்வொரு நாட்டிற்கும் கொரோனா தடுப்பு மருந்துகளை சம அளவில் விநியோகிக்க வேண்டும் என்று உற்பத்தி நிறுவனங்களுக்கு உலக சுகாதார அமைப்பின் சார்பாக அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

கொரோனா தடுப்பூசி முகாம்கள் அதிக வருமானம் ஈட்டக்கூடிய பணக்கார நாடுகளில் தீவிரமாக நடந்துவருகிறது. அதேசமயம் குறைவான அல்லது ஏழை நாடுகளில் உலகம் முழுவதும் பிரபலமாக பேசப்படுகிற கொரோனா தடுப்பு மருந்துகளை வாங்குவது என்பது கேள்விக்குறியாக மாறியிருக்கிறது.

குறிப்பாக, உலகளவில் முதல் இரண்டு இடங்களில் இருக்கிற ஃபைசர் / பயோடெக் மற்றும் மாடர்னா நிறுவனங்களின் தடுப்பூசிகள் ஏழை நாடுகளுக்கு கனவாகத்தான் இருக்கிறது. காரணம் ஃபைசர் தடுப்பூசியை மைனஸ் 70 டிகிரி செல்ஷியஸில் பத்திரப்படுத்த வேண்டும். இது எல்லா நாடுகளுக்கும் பொருந்தாத ஒன்று. காரணம், வெப்ப நாடுகளில் இந்த தடுப்பூசிகளை வைப்பதற்கு என்றே பிரத்யேகமான குளிரூட்டிகள் தேவைப்படும்; அதற்கு அதிக செலவும் ஆகும். தோராயமாக ஒரு டோஸ் ஃபைசர் தடுப்பூசி மருந்துக்கு ஆகும் செலவு 20 அமெரிக்க டாலர்கள். மாடர்னாவை நமது வீடுகளில் உள்ள குளிர்சாதனப் பெட்டிகளில் 30 நாட்கள்வரை வைத்து பயன்படுத்தலாம். ஆனால், இது ஃபைசரை விட விலை அதிகமானது. எனவே, குறைந்த மற்றும் நடுத்தர வர்க்க நாடுகளுக்கு நேரடியாக இந்த தடுப்பூசி கிடைப்பது என்பது சாத்தியமற்றதாகவே கருதப்படுகிறது.

இதுதவிர ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட அனைத்து தடுப்பூசிகளும் பணக்கார நாடுகளால் வாங்கப்பட்டு விட்டதால், கிடைக்கக்கூடிய தன்மை என்பது மற்றொரு பிரச்னையாக உள்ளது. இந்த ஆண்டு மார்ச் - டிசம்பர் மாதங்களுக்குள் 50 மில்லியன் தடுப்பு மருந்துகளை ஆப்பிரிக்காவுக்கு வழங்க ஃபைசர் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. ஆனால், அங்குள்ள 1.3 பில்லியன் மக்கள்தொகைக்கு இந்த மருந்து எம்மாத்திரம்?

மாடர்னா நிறுவனம் இந்த ஆண்டு ஆப்பிரிக்காவுக்கு மருந்து வழங்குவது பற்றி எந்த ஒப்பந்தத்தையும் இதுவரை செய்யவில்லை. இதனால், தடுப்பூசி கிடைக்காத நிலைக்கு தள்ளப்படுவோம் என்ற பயம் பல நாடுகளுக்கு உண்டாகி இருக்கிறது.

கோவாக்ஸ்: உலக சுகாதார அமைப்பின் திட்டம்

தேவைப்படும் நாடுகளுக்கு தேவையான தடுப்பூசிகளை சரியான முறையில் கிடைக்கச்செய்ய உலக சுகாதார அமைப்பு வகுத்துள்ள திட்டம்தான் இந்த கோவாக்ஸ். குறிப்பாக ஏழை நாடுகளுக்கு தடுப்பூசி சென்றடைய வேண்டும் என்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம். அதன்படி 2020ஆம் ஆண்டு 2.4 பில்லியன் டாலர் ஒதுக்கப்பட்டு, குறைந்த மற்றும் நடுத்தர வருமானமுள்ள நாடுகளுக்கு 1.3 பில்லியன் தடுப்பூசி மருந்துகளை வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

எப்படியும், அவசரகால பயன்பாட்டிற்கு உலக சுகாதார நிறுவனத்தின் கோவாக்ஸ் திட்டப்படி அங்கீகரிக்கப்பட்டுள்ள ஒரே ஒரு தடுப்பு மருந்து ஃபைசர் மட்டும்தான். மூன்றாவதாக அங்கீகரிக்கப்பட்டுள்ள தடுப்பூசி மருந்து ஆக்ஸ்ஃபோர்டு - ஆஸ்ட்ராசெனேகா. இதன் விலையும் குறைவு; பத்திரப்படுத்துவதும் சுலபம். இந்த தடுப்பூசி கோவாக்ஸ் திட்டத்தின் அனுமதிக்காக காத்திருக்கிறது.

கோவாக்ஸ் திட்டத்தின்கீழ் ஜனவரி மாத இறுதியில் குறைந்தது 2 பில்லியன் தடுப்பூசிகளை உலகளவில் விநியோகிக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இது நிறைவேற்றப்பட்டாலும், ஏழை நாடுகளின் மக்கள்தொகைக்கு போதுமானதாக இருக்காது.

ஆப்பிரிக்க நாடுகளின் சார்பாக தென் ஆப்பிரிக்க அதிபர் செரில் ராமபோசா இதுபற்றி கூறுகையில், கோவாக்ஸ் திட்டத்தின்படி பிப்ரவரி - ஜூன் மாதங்களுக்குள் கிடைக்கும் தடுப்பூசிகள் முன்கள பணியாளர்களுக்கே போதுமானதாக இருக்காது என்றாலும், அந்த மருந்துகள் ஆப்பிரிக்காவில் தொற்றுப்பரவலை கட்டுப்படுத்த கட்டாயம் போதுமானது இல்லை என்று தெரிவித்திருக்கிறார். மேலும், கோவாக்ஸ் திட்டத்தின்படி ஆப்ரிக்காவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மருந்து 300 மில்லியன் மக்களுக்குத்தான் பயன்படுத்தமுடியும். இது கண்டத்தின் மக்கள்தொகையில் 20% தான் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மீட்புப் பணியில் இறங்கியிருக்கிறதா இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா நாடுகள்?

அதிக வருமானமுள்ள நாடுகள் கோவக்ஸ் திட்டத்தைத் தவிர்த்து நேரடியாக தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களுடன் ஒப்பந்ததை மேற்கொண்டுள்ளது. அதேசமயம் அர்ஜெண்டினா, இந்தோனேசியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் துருக்கி போன்ற நடுத்தர வருமானமுள்ள நாடுகள் விலை சற்று குறைவான இந்தியா, சீனா மற்றும் ரஷ்ய நாடுகளில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளை நாடியுள்ளன.

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி நிறுவனமான சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா, ஆக்ஸ்ஃபோர்டு நிறுவனத்தின் ஆஸ்ட்ராசெனேகா தடுப்பூசி தயாரிப்புக்கான உரிமத்தைப் பெற்றிருக்கிறது. பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசி இறுதி சோதனை கட்டத்தில் உள்ளது. இந்தியா இந்த இரண்டு தடுப்பூசிகளுக்குமே ஜனவரி 3ஆம் தேதி ஒப்புதல் அளித்திருக்கிறது.

இந்திய தடுப்பூசி நிறுவனங்கள் மற்ற நாடுகளுக்கு தடுப்பூசி தயாரிக்கும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. அதன்படி, பங்களாதேஷ் நாட்டிற்கு 30 மில்லியன் டோஸ் ஆக்ஸ்ஃபோர்டு ஆஸ்ட்ராசெனேகா தடுப்பூசிகளும், தென் ஆப்பிரிக்காவுக்கு 1 மில்லியன் தடுப்பூசிகளை ஜனவரி மாத இறுதிக்குள்ளும், அடுத்தகட்டமாக அரை மில்லியன் தடுப்பூசிகளை பிப்ரவரி மாதத்திற்குள்ளும் கொடுக்க ஒப்பந்தம் செய்துள்ளது.

ஆபிப்ரிக்காவுக்கு 3 இடங்களில் இருந்து கிடைக்கவுள்ள மொத்தம் 270 டோஸ் தடுப்பூசி மருந்துகளில் இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட்டும் ஓர் அங்கமாக செயல்படுகிறது. இது ஜூன் மாத இறுதிக்குள் 50 மில்லியன் டோஸ் மருந்துகளை கொடுக்கவிருக்கிறது. அதேபோல் சீனாவும் அரசியல் நோக்கங்களை கருத்தில்கொண்டு உலகளவில் தனது தடுப்பூசி மருந்துகளை விநியோகிக்கும் என்று அந்நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்திருக்கிறார். இதன் விலை சற்று மலிவாக இருப்பதால் லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா போன்ற நாடுகள் சீனாவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

சினோஃபார்ம் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர சீன அரசு கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி அங்கீகாரம் கொடுத்தது. இந்த நிறுவனம் 2021-இல் சுமார் 1 பில்லியன் மருந்துகளை தயாரிக்கும் என அறிவித்தது. இதற்கு அரபு ஐக்கிய நாடுகள், பக்ரைன் மற்றும் மொராக்கோ போன்ற நாடுகள் ஒப்பந்தம் செய்துள்ளது. அதேபோல் எகிப்து மற்றும் பாகிஸ்தானும் 10 மில்லியன் மற்றும் 1.2 மில்லியன் தடுப்பூசிகளுக்கு ஒப்பந்தம் செய்திருக்கிறது.

அதேபோல் சீனாவின் மற்றொரு தடுப்பூசி நிறுவனமான சினோவிக், கொரோனாவாக்குடன் துருக்கி மற்றும் இந்தோனேசியா நாடுகள் ஒப்பந்தம் செய்திருக்கிறது. தாய்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளும் விரைவில் ஒப்பந்தம் செய்யவுள்ளதாக தெரிவித்திருக்கிறது. பிரேசிலின் சாவோ பாலோ என்ற மாகாணமும் கொரோனாவாக் தடுப்பூசியுடன் 46 மில்லியன் தடுப்பூசி ஒப்பந்தம் செய்திருக்கிறது. இந்த மாகாணம்தான் அந்த நாட்டில் இந்த தடுப்பூசி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யும் முதல் மாகாணம் ஆகும்.

உலகிலேயே கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி அளித்த முதல் நாடு ரஷ்யாதான். ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்குத்தான் ஆகஸ்ட் 11ஆம் தேதியே ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த தடுப்பூசி நிறுவனத்துடன் அர்ஜெண்டினா டிசம்பர் 24ஆம் தேதி ஒப்பந்தம் செய்தது. இதுதான் முதலில் சப் - சஹாரன் ஆப்ரிக்கா மற்றும் கென்யா நாடுகளில் விநியோகிக்கப்பட உள்ளது. இது ஹீடரோ ட்ரக்ஸ் மற்றும் பிற இந்திய நிறுவனங்களுடன் தயாரிப்பு ஒப்பந்தம் செய்திருக்கிறது. ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் பரிசோதனைக்கு பிரேசில் நாட்டின் பாஹியா மாகாணம் அனுமதி அளித்திருக்கிறது.

உலகத்திற்கே தடுப்பூசி கிடைப்பது எப்போது?

நடுத்தர வருமானமுள்ள நாடுகளில் உலக சுகாதார நிறுவனத்தின் ஒப்பந்தத்தையும் தாண்டி, தனிப்பட்ட தடுப்பூசி ஒப்பந்தம் மற்றும் விநியோகம் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டேதான் வருகிறது. ஆனால் இது தடுப்பூசி பற்றாக்குறை பயத்தையும் அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் உலக சுகாதார நிறுவனத்தின் அனுமதி பெறாத தடுப்பூசிகளின் தரம் மற்றும் பரிசோதனை குறித்த சந்தேகங்களும், கேள்விகளும் மக்கள் மத்தியில் அதிகரித்துக்கொண்டேதான் வருகிறது. உலகம் முழுவதும் தடுப்பூசி கிடைக்க வேண்டுமானால் சீனா, இந்தியா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் இன்னும் வேகம் காட்டவேண்டும். அதேபோல் ஏழை நாடுகளுக்கும் தடுப்பூசி சென்று சேருவதற்கான வழிமுறைகள் உருவாக்கப்படவேண்டும்.

எனவே, ஆகஸ்ட் இறுதிக்குள் குறைந்தது 300 மில்லியன் தடுப்பூசிகளையாவது உருவாக்கிவிட வேண்டும் என்பதை இந்தியா இலக்காகக் கொண்டுள்ளது. இதுவே, உலக மக்கள்தொகையில் கால்பங்கைக்கூட பூர்த்தி செய்யாது. உலகிலுள்ள அனைத்து மக்களுக்கும் அல்லது 90% மக்களுக்காவது தடுப்பூசி சென்று சேருவதற்கு எப்படியும் 2024ஆம் ஆண்டு வரை காத்திருக்கவெண்டும் என்கிறார் சீரம் இன்ஸ்டிடியூட்டின் தலைவர் அதார் பூனவல்லா.

இவை அனைத்தையும் தாண்டிய பயம் என்னவென்றால், தடுப்பூசிகளின் தன்மையையும் தாண்டி, கொரோனா வைரஸின் தொடர் உருமாற்றம். இப்போது இருக்கும் பெரிய சவாலே கொரோனாவின் உருமாற்றமும், தடுப்பூசி விநியோகமும் ஒன்றுடன் ஒன்று போட்டி போடுவதுதான்.

Source: The Conversation

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com