அமெரிக்கா மற்றும் ஆப்கனின் தலிபான் அமைப்பு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன்படி, ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா உள்ளிட்ட அந்நியப் படைகள் 14 மாதங்களில் வெளியேற ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் 2001ஆம் ஆண்டு செப்டம்பரில் இரட்டைக் கோபுர கட்டடங்கள் மற்றும் ராணுவ தலைமையகமான பென்டகன் மீது தலிபான்கள் நடத்திய தாக்குதல் உலக வரலாற்றில் மறக்க முடியாத சம்பவம். தாக்குதலைத் தொடர்ந்து ஓசாமா பின்லேடனை அழிக்கும் நோக்கில் ஆப்கானிஸ்தானில் களமிறங்கிய அமெரிக்க படையினர், கடந்த 18 ஆண்டுகளாக அந்நாட்டில் முகாமிட்டுள்ளனர். ஒசாமா பின்லேடனை அழித்துவிட்டதாக கூறிய அமெரிக்கா, தலிபான் அமைப்பின் பல்வேறு முக்கிய தலைவர்களையும் கொன்றுள்ளது.
போரில் அப்பாவி பொதுமக்கள் ஏராளமானோர் உயிரை இழந்துள்ள சூழலில் ஏழை நாடாகவே நீடிக்கிறது ஆப்கானிஸ்தான். சுமார் 25 லட்சம் ஆப்கன் மக்கள் வெளிநாடுகளில் அகதிகளாக பதிவு செய்துள்ளதுடன், சொந்த நாட்டிலேயே 20 லட்சம் பேர் இடம்பெயர்ந்து வசிக்கின்றனர். அமெரிக்காவைப் பொறுத்தவரை ஆப்கனில் தனது படைகளுக்காக ஒரு லட்சம் கோடி டாலருக்கும் மேலாக இதுவரை செலவிட்டுள்ளது. இந்த சூழலில், கத்தார் நாட்டின் தலைநகர் தோகாவில் அமெரிக்க சிறப்பு தூதர் சல்மே கலீல்ஜாத் மற்றும் தலிபான் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் முல்லா அப்துல் கனி பரதார் ஆகியோர் வரலாற்று முக்கியத்துவமிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். ஆப்கனில் இருந்து படைகளை திரும்பப் பெறுவதற்கான அந்த ஒப்பந்தம், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது.
ஆப்கனில் அமைதியை பராமரிக்க சுமார் 13 ஆயிரம் வீரர்களைக் கொண்ட அமெரிக்க கூட்டுப் படைகள் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அவர்களை 14 மாதங்களில் திரும்பப் பெற ஒப்புக் கொள்ளப்பட்டுள்ள நிலையில், அடுத்த 4 மாதங்களில் வீரர்கள் எண்ணிக்கையை 8 ஆயிரத்து 600 ஆக குறைக்கவும் அமெரிக்கா முடிவு செய்திருக்கிறது. தலிபான் தலைவர்களை விரைவில் சந்திக்க இருப்பதாக அறிவித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஒப்பந்த்திற்கு மாறாக ஏதேனும் நிகழ்ந்தால் ஆப்கானிஸ்தானுக்கு மீண்டும் படைகளை அனுப்ப தயங்க மாட்டோம் என எச்சரித்துள்ளார்.
ஆப்கன் - அமெரிக்கா இடையே ஒப்பந்தம் கையெழுத்தான நிகழ்வில் கத்தாருக்கான இந்திய தூதர் குமரன் கலந்து கொண்டார். இந்த ஒப்பந்தம் மூலம் ஆப்கனில் அமைதி ஏற்படுவதுடன், வெளிநாடுகளுக்கு பயங்கரவாத ஏற்றுமதி முற்றிலும் தடுக்கப்பட வேண்டும் என்று இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் கருத்து தெரிவித்துள்ளார்.