அண்டை நாடான பாகிஸ்தானில், ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையிலான கோடை பருவமழை, மில்லியன் கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கும் உணவுப் பாதுகாப்பிற்கும் இன்றியமையாதது. ஆனால், காலநிலை மாற்றத்தால் பருவமழை மோசமானதாக மாறுகிறது. கடந்த 2022ஆம் ஆண்டு, காலநிலை மாற்றத்தால் பெய்த பருவமழையின் விளைவாக பாகிஸ்தானில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக, இந்த வெள்ளத்தால், நாட்டின் மூன்றில் ஒரு பகுதி, நீரில் மூழ்கியது மட்டுமில்லாமல், மில்லியன் கணக்கான மக்களும் இடம்பெயர்ந்தனர். மேலும், இதனால் விவசாயமும் முற்றிலும் அழிந்தது. தவிர, அம்மக்களும் பெருமளவு பாதிக்கப்பட்டனர். இதிலிருந்து இன்னும் மீளமுடியாத நிலையில் அம்மக்கள் உள்ளனர். தவிர, அந்நாட்டில் பொருளாதாரமும் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.
இந்த நிலையில், பாகிஸ்தான் மக்கள், தங்கள் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்காக, பணத்தைப் பெற்றுக்கொண்டு தங்கள் மகள்களைத் திருமணம் செய்துவைக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதிலும் சிறுவயதுக் குழந்தைகளைத் திருமணம் செய்து வைக்கம் நிகழ்வு அதிகளவில் நடைபெறுவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் ஷமிலா என்ற 14 வயது சிறுமியும் அவருடைய 13 வயது சகோதரியான அமினாவும் திருமணம் செய்துகொடுக்கப்பட்டுள்ளனர். அதாவது, வெள்ளத்திலிருந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தை மீட்பதற்காக, அந்தச் சிறுமிகளின் பெற்றோர் பணத்தைப் பெற்றுக் கொண்டு திருமணம் செய்துவைத்துள்ளனர். இது, 2022 வெள்ளத்திற்குப் பிறகு, தாது மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் குழந்தைத் திருமணம் அதிகரித்துள்ளது. இது மோசமான பாதிப்புக்குள்ளான பகுதிகளில் ஒன்றாகக கருதப்படுகிறது. குறிப்பாக, கான் முகமது மல்லாஹ் கிராமத்தில், ஷமிலாவும் அமினாவும் கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொடுக்கப்பட்டுள்ளனர். இதில், கடந்த பருவமழைக்குப் பிறகு 45 சிறுமிகள் திருமணம் செய்து கொடுக்கப்பட்டுள்ளனர். அவர்களில் கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் மட்டும் 15 பேர் திருமணம் செய்து கொடுக்கப்பட்டுள்ளனர்.
பெருகிவரும் குழந்தைத் திருமணங்கள் குறித்து, பாகிஸ்தான் மக்கள், ” 2022 மழைக்குப் பிறகு எல்லாம் அழிந்துவிட்டது. அதற்கு முன்பு எங்கள் சிறுமிகள் விவசாயத்தில் நிலவும் எல்லா வேலைகளையும் பார்ப்பார்கள். ஆனால், அதற்கு இன்று வழியில்லை. அதன் காரணமாகவே எங்கள் சிறுமிகளுக்கு இவ்வளவு இளம்வயதிலேயே திருமணம் செய்து வைக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. ஏனெனில், 2022-இல் ஏற்பட்ட வெள்ளத்தால், நீரில் நச்சுத்தன்மை கலந்துவிட்டது. அதன் துர்நாற்றம், அப்பகுதி முழுவதையும் மூழ்கடிக்கிறது. இதனால்தான், வறுமையிலிருந்து குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக, தங்கள் மகள்களை சிறுவயதிலேயே திருமணத்தை செய்துகொடுக்கும் நிலைக்கு, இப்போது தள்ளப்பட்டிருக்கிறோம்” எனத் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக வானிலை நிகழ்வுகள்கூட சிறுமிகளை ஆபத்தில் ஆழ்த்துவதாகவும், குழந்தைத் திருமணத்தின் பாதிப்பு 18 சதவிகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.