அமெரிக்காவில் 47வது அதிபராக டொனால்டு ட்ரம்ப் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜனவரி 20 ஆம் தேதி அவர் பதவியேற்க உள்ளார். வெள்ளை மாளிகையில் அதற்கான பணிகள் வேகம்பிடித்து வருகின்றன. உலகம் முழுவதும் அவரைச் சுற்றிப் பல்வேறு சவால்கள் காத்திருக்கும் வேளையில், தம்முடைய ஆட்சியில் யார் யாருக்குப் பங்கு கொடுப்பார் என்கிற தகவல்கள் விவாதிக்கப்பட்டு வருகின்றன. மறுபுறம், உலகின் மிகவும் பிரபலமான கிரிப்டோகரன்சியான பிட்காயினின் மதிப்பும் உயரத் தொடங்கியுள்ளது. இது, பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலுக்குப் பிறகு, கிரிப்டோ சந்தைகளுக்குச் சாதகமான சூழல் அமைந்து வருகிறது. ட்ரம்பின் வெற்றிக்குப் பிறகு, பிட்காயின் மதிப்பு தொடர்ந்து ஏறுமுகத்தைச் சந்தித்துவரும் நிலையில், கடந்த வாரம் (நவ.12) 89,637 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.75,64 லட்சம்) என்ற புதிய உச்சத்தை எட்டியது. தொடர்ந்து, நேற்று 94,000 டாலரைத் தாண்டி, இதுவரை இல்லாத அளவுக்கு உச்சம் தொட்ட நிலையில், இன்று, (நவ.21) முதல்முறையாக பிட்காயின் விலை 97,000 டாலரை எட்டியுள்ளது.
Coinmarketcap பற்றிய தரவுகளின்படி, பிட்காயின் விலை 5.7% உயர்ந்து 97,445 டாலரில் தற்போதைய சந்தை மூலதனம் 1.93 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சியான பிட்காயினின் விலை இதுவரை இல்லாத அளவுக்கு 97,628 டாலரை எட்டியது. மேலும் 1,00,000-டாலரை நோக்கி நகர்கிறது. அமெரிக்காவின் அதிபராக ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்தே ஏற்றம் கண்டு வரும் பிட்காயின், இந்த ஆண்டு இருமடங்காக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து Mudrex இணை நிறுவனர் மற்றும் CEO Edul Patel, ”ஒரு வருடத்திற்கு முன்பு பிட்காயின் விலை 30,000 டாலராக இருந்தது. ஆனால் இன்று, அது 97,000 டாலரை எட்டியுள்ளது. இது 300%க்கும் மேலான குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகும். அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து வளர்ந்து வரும் நம்பிக்கையால் இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது. மேலும் வரும் காலங்களிலும் பிட்காயின் விலை உயரும்” எனத் தெரிவித்துள்ளார்.
பிட்காயின் என்பது மின்னணு பணமான கிரிப்டோகரன்சி வகைகளில் ஒன்றாகும். இந்தப் பணத்தை உலகின் பல்வேறு டிஜிட்டல் பரிவர்த்தனைகளின்போது பயன்படுத்த முடியும். இது பெரும்பாலும் ஒழுங்குபடுத்தப்படாத மற்றும் அதன் டெவலப்பர்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. யாருடைய கட்டுப்பாட்டிலும் இயங்காத இந்த பரிவர்த்தனையை ஏற்க எல்லா நாடுகளுமே தயக்கம் காட்டுகின்றன. தற்போது உலகம் முழுவதும் உள்ள ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பல்பொருள் அங்காடி தொடர்கள் மற்றும் வணிகவளாகங்களில் பிட்காயின்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.