ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கைப்பற்றியதில் இருந்தே அதில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. உதாரணத்துக்கு ப்ளூ டிக்கிற்கு கட்டணம், எடிட் செய்யும் வசதிகள் உள்ளிட்டவையெல்லாம் அறிமுகம் செய்யப்பட்டன. அவற்றை தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதமே லோகோவில் குருவியை நீக்கிவிட்டு, நாய் படத்தை வைத்தார் மஸ்க். அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் மீண்டும் நீலக்குருவியாக லோகோ மாற்றப்பட்டது. இந்நிலையில் மீண்டும் ட்விட்டர் லோகோவை இன்று மாற்றியுள்ளார் மஸ்க். அதில் நீல பறவைக்கு பதிலாக X லோகோவை வைத்துள்ளார்.
முன்னதாக கடந்த ஜூலை 12ஆம் தேதி xAI என்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தை எலான் மஸ்க் தொடங்கிய நிலையில் அதை விளம்பரப்படுத்தும் வகையில் ட்விட்டர் லோகோவை அவர் மாற்ற திட்டமிட்டதாக கூறப்பட்டது. இருப்பினும் இன்றே லோகோ மாற்றப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக எலான் மஸ்க் நேற்று காலை அறிவித்திருந்த நிலையில், தன் அறிவிப்புடன் ட்விட்டரின் புதிய லோகாவான 'எக்ஸ்' தொடர்பான சிறிய வீடியோவையும் வெளியிட்டிருந்தார். X எனும் பெயர் மீது எலான் மஸ்க்கிற்கு எப்போதும் தீராத காதல் உண்டு. எந்தளவுக்கு என்றால், அவரது நிறுவனங்களுக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் X என்ற எழுத்து இல்லாத பெயரே இருக்காதாம்!
இந்நிலையில் இனி வரும் நாட்களில் X என்றே ட்விட்டர் நிறுவனம் அழைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார் மஸ்க்! இதற்காக X.com என்று ட்விட்டரை மாற்றியுள்ளார் மஸ்க். எலான் மஸ்க்கின் இந்த அறிவிப்பிற்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒரு சேர வந்த வண்ணம் உள்ளது. X -க்கும் எலான் மஸ்க்கும் என்னதான் சம்பந்தம்? முழு செய்தியை, கீழ்வரும் வீடியோவில் தெரிந்துகொள்ளுங்கள்!