இஸ்ரேல் - ஹமாஸ் ஆயுதக்குழு இடையேயான போரின் தீவிரம், பல ஆண்டுகளில் இல்லாத பேரழிவை ஏற்படுத்தியுள்ளதால் உலக நாடுகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளன. இந்தச்சூழலில், இந்தியாவின் வர்த்தகத்திலும் இதன்தாக்கம் இருக்கத்தான் செய்யும் என்கின்றனர் ஏற்றுமதியாளர்கள். முக்கியமாக, வான்வழி, கடல்வழி மற்றும் நிலப்பரப்பு வழியாகவும் தாக்குதல் நடப்பதால், இஸ்ரேலுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்வதில் ஆபத்து அதிகமாக உள்ளது.
இதன்காரணமாக, இஸ்ரேலுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு காப்பீட்டிற்கான பிரீமியத்தொகையும், ஏற்றுமதி செய்வதற்கான செலவினங்களையும் இந்திய அரசின் கீழ் செயல்படும் ஏற்றுமதி மற்றும் கடன் உத்தரவாதத்திற்கான அமைப்பு அதிகரிக்கும் எனக் கூறுகின்றனர். எனவே அந்நாட்டிற்கு ஏற்றுமதி செய்து ஈட்டும் லாபம் கணிசமாக குறைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றனர்.
கடந்த 2 நிதியாண்டுகளாக இஸ்ரேலுக்கு இந்தியா ஏற்றுமதி செய்வது 75 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 2021-22ஆம் நிதியாண்டில், சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்த நிலையில், அது 2022-23ஆம் நிதியாண்டில் சுமார் 68 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
2022-2023 ஆம் நிதியாண்டில் இஸ்ரேலுக்கு சுமார் 45 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் இந்தியா டீசலை ஏற்றுமதி செய்துள்ளது. அடுத்ததாக, பாலிஷ் செய்யப்பட்ட வைரங்கள் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலும், சுமார் 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தொலைத்தொடர்பு சாதனங்களையும் இஸ்ரேலுக்கு இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது.
இதுதவிர, பொட்டாசியம் குளோரைடு 861 கோடி ரூபாய் மதிப்பிலும், 490 கோடி ரூபாய் மதிப்பில் களைக்கொல்லிகளையும் இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. மென்பொருள் சேவையில் இஸ்ரேலுக்கு தேவையான software development, IT consulting, data processing போன்றவைகளையும் இந்தியா ஏற்றுமதி செய்து வருகிறது.
அதேநேரம், 2022-23ஆம் நிதியாண்டில் இஸ்ரேலில் இருந்து 18 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது. அதாவது, இந்தியாவில் உள்ள பெரிய மருத்துவமனைகள் இஸ்ரேலில் இருந்து மருத்துவ உபகரணங்களை இறக்குமதி செய்கின்றன. இதுதவிர, இஸ்ரேலில் உள்ள நிறுவனங்கள் இந்தியாவில் சுகாதாரத்துறை, மாற்று எரிசக்தித்துறை, ராணுவ தளவாடங்கள், கட்டுமானம் உள்ளிட்ட துறைகளில் முதலீடுகளை செய்துள்ளன. இரு நாடுகளும் தடையற்ற வர்த்தகத்தில் கையெழுத்திட்டுள்ளன.
இதுஒருபுறமிருக்க போர் காரணமாக வளைகுடா நாடுகளில் பதற்றம் தொற்றியுள்ள நிலையில், குறுகியகால அடிப்படையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் தாறுமாறாக ஏறத் தொடங்கியுள்ளது. இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் 80 சதவிகிதம் இறக்குமதி செய்யப்படுகிறது. தற்போது கச்சா எண்ணெய் விலை ஏற்றம், இறக்குமதிக்கான செலவினங்களை அதிகரிக்கும். இதனால், உள்நாட்டில் பணவீக்கம் உயரும் சூழலும் உருவாகக்கூடும்.
மிகப்பெரிய இஸ்ரேலிய துறைமுகமான ஹைஃபா, தாக்குதல் நடைபெற்று வரும் காஸாவில் இருந்து சுமார் 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. மற்றொரு பெரிய துறைமுகமான அஷ்டோத், ஹைஃபா துறைமுகத்துக்கும் தொலைவிலேயே இருக்கிறது. இதனால் பாதிப்புகள் பெரிதாக இருக்காது என்றாலும், இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான அதானி குழுமத்தின் துறைமுகங்கள் ஹைஃபா துறைமுகத்தில் சுமார் 70 சதவிகித பங்குகளை கொண்டுள்ளது. எனவே, அதானி போர்ட்ஸ் நிறுவனத்தில் சிறிய தாக்கத்தை ஏற்படுத்தலாம். இஸ்ரேலுடனான இந்தியாவின் வணிகப்பொருள் வர்த்தகம் செங்கடலில் அமைந்துள்ள ஈலாட் துறைமுகம் மூலமாகவே நடைபெறுகிறது. துறைமுகங்களில் பாதிப்புகள் ஏற்படுமாயின் அது இருநாட்டு வர்த்தகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
முன்னதாக, 1967ஆம் ஆண்டில் இஸ்ரேல் - அரபு நாடுகளுக்கு இடையே 6 நாட்கள் தொடர்ந்த போர் நினைவிருக்கலாம். சர்வதேச அளவில் கப்பல் போக்குவரத்திற்கு முக்கிய பங்களிக்கும் சூயஸ் கால்வாயை எகிப்து சுமார் 8 ஆண்டுகள் வரை மூட இந்த போர் முக்கிய காரணமாக அமைந்தது. மேற்காசிய நாடுகள் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்ய சூயஸ் கால்வாயைதான் பயன்படுத்தி வந்தன. இதற்கிடையில், 1973ஆம் ஆண்டில் இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் நடந்த மற்றொரு போர் காரணமாக, கச்சா எண்ணெய் விலை அதிகரித்தது. இது சர்வதேச பொருளாதாரத்தை நெருக்கடியில் வைத்திருந்தது.
இஸ்ரேலில் காஸா பகுதியில் மட்டுமே தாக்குதல்கள் நடக்கும் நிலையில், மற்ற பகுதிகளில் பெரிய பாதிப்பு இல்லை எனக் கூறப்படுவதால் வர்த்தகத்தில் பெரிய அளவிற்கு இழப்பு ஏற்பட வாய்ப்பில்லை என்றாலும் எவ்வளவு காலத்திற்கு போர் நீடிக்கும் என்பதை பொறுத்தே பாதிப்புகள் பற்றி கூறமுடியும் என ஏற்றுமதியாளர்கள் கூறுகின்றனர்.