ஆயுத வழி.. தேர்தல் பாதை; உலகை உறைய வைத்த ஹமாஸ் இயக்கம் உருவானதன் வரலாற்று பின்னணி என்ன? - முழுவிபரம்

தொடக்ககாலத்தில் இஸ்ரேலுக்கு எதிரான வன்முறைகளை நடத்திய ஹமாஸ் இயக்கம், பிற்காலத்தில் ஜனநாயகப் பாதைக்குத் திரும்பியது. இதற்கு ஆதாரமாக இருப்பது 2006-ம் ஆண்டு நடந்த பாலஸ்தீனப் பொதுத் தேர்தல்.
ஹமாஸ்
ஹமாஸ்pt web
Published on

ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேல் ராணுவத்தினருக்கும் இடையே நடந்த போர் இரண்டாம் நாளான நேற்றும் நீடித்தது. ‘ஆபரேஷன் அல்-அக்‌ஷா பிளட்’ என்ற பெயரில் தாக்குதலைத் தொடங்கிய ஹமாஸ் ஆயுதக் குழுவினர் 20 நிமிடங்களில் சுமார் 5000 ராக்கெட் குண்டுகளை இஸ்ரேலை வீசி தாக்குதல் நடத்தினர். இஸ்ரேல் ராணுவமும் பதில் தாக்குதலை தொடர்ந்தது.

இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக் குழுவினர் நடத்திய தாக்குதல் உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹமாஸ் இயக்கம் என்றால் என்ன? அதை வழிநடத்துவது யார்? இந்த செய்தியில் பார்க்கலாம்.

பாலஸ்தீனத்தின் காஸா பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் இயக்கம், 1980-களின் இறுதியில் தொடங்கிய முதலாவது பாலஸ்தீன எழுச்சியின் போது ஷேக் யாசின் என்பவரால் உருவாக்கப்பட்டது. தற்போது இதன் தலைவர் இஸ்மாயில் ஹனியே(ISMAIL HANIYEH). மேற்குக் கரையிலும் காஸாவிலும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்துவதற்காகத் தொடங்கப்பட்ட அமைப்பு இது. இஸ்ரேலை அழிக்க வேண்டும் என்று இந்த இயக்கத்தின் தொடக்க சாசனத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.

1990களில் இஸ்ரேலுக்கு எதிராக குண்டுவெடிப்புகளையும் தற்கொலைப்படைத் தாக்குதல்களையும் நடத்தியிருக்கிறது இந்த அமைப்பு. இஸ்ரேல், அமெரிக்கா, ஐரோப்பா, கனடா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் இந்த அமைப்பை பயங்கரவாதப் பட்டியலில் வைத்திருக்கின்றன.

ஆனால், தொடக்ககாலத்தில் இஸ்ரேலுக்கு எதிரான வன்முறைகளை நடத்திய ஹமாஸ் இயக்கம், பிற்காலத்தில் ஜனநாயகப் பாதைக்குத் திரும்பியது. இதற்கு ஆதாரமாக இருப்பது 2006-ம் ஆண்டு நடந்த பாலஸ்தீனப் பொதுத் தேர்தல். இந்தத் தேர்தலில் யாசர் அராஃபத்தால் உருவாக்கப்பட்ட ஃபதா இயக்கத்தை எதிர்த்துக் களமிறங்கியது ஹமாஸ். யாரும் எதிர்பார்க்காத வகையில், ஃபதாவை வீழ்த்தி பாலஸ்தீனத்தின் மாபெரும் அரசியல் இயக்கமாக உருவெடுத்தது. கூட்டாட்சி அமைக்கப்பட்டது.

இந்த அமைதிச்சூழல் வெகுநாட்கள் நீடிக்கவில்லை. 2007-ம் ஆண்டில் ஃபதா இயக்கத்துடனான கருத்து வேறுபாடு மோதலாக வெடித்தது. மோதல் பெரும் ஆயுதச் சண்டையாக உருவாகி, இரு இயக்கங்களும் நிரந்தரமாகப் பிரியும் நிலைக்குத் தள்ளப்பட்டன. மேற்குக் கரையில் இருந்து ஹமாஸ் இயக்கம் விரட்டப்பட்டது. புவியியல் ரீதியாக மேற்குக் கரையில் இருந்து தனித்து இருக்கும் காஸா பிராந்தியத்துக்குள் ஹமாஸ் முடங்கியது. இங்கிருந்தபடியே, இஸ்ரேலை நோக்கி ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளது இந்த இயக்கம். இதன் ஒட்டுமொத்த ராணுவ பலமே இதுபோன்ற ராக்கெட்டுகள்தான்.

இஸ்ரேலின் படைவலிமைக்கு முன்னால், இது ஒன்றுமேயில்லை. மேற்குலகம் முழுவதுமே பயங்கரவாத இயக்கமாகப் பார்த்தாலும், காஸா பிராந்திய மக்களுக்கு ஹமாஸ்தான் அரசாங்கம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com