டொனால்டு ட்ரம்பை அவரது மனைவி மெலனியா விவாகரத்து செய்தால், அளிக்கப்பட வேண்டிய ஜீவனாம்சம் என்பது முதல் இரண்டு மனைவிகளுக்குக் கொடுக்கப்பட்டதைவிட அதிகமாக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியை அடுத்து ட்ரம்ப்பை, அவரின் மனைவி மெலனியா வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறியதும் விவாகரத்து செய்ய இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கெனவே, இருவரிடம் மனக்கசப்பு இருந்துவந்த நிலையில், வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறியதும் ட்ரம்ப்பை மெலனியா விவகாரத்து செய்வார் என வெள்ளை மாளிகையின் முன்னாள் உதவியாளர்கள் ஸ்டீபனி வோல்கோஃப், ஒமரோசா மனிகவுல்ட் நியூமன் என்ற இருவரும் சமீபத்தில் ஊடகங்களுக்கு பேசியிருந்தனர்.
மேலும், ``மெலனியா நாட்களை எண்ணி வருகிறார். தற்போது விவாகரத்து பெற்றால் பதவியில் இருக்கும் ட்ரம்ப்புக்கு அது பெரும் அவமானமாக அமையும். அதேநேரம் தன்னை பல வழிகளில் ட்ரம்ப் பழி வாங்க நேரிடும் என்றும் மெலனியா கருதுகிறார்" என்றும் அவர்கள் கூறி இருந்தனர்.
ஏற்கெனவே தேர்தல் தோல்வியில் பல சர்ச்சைகளை சந்தித்து வரும் ட்ரம்ப்புக்கு இது புதிய சர்ச்சையாக உருவெடுத்தது. எனினும் இதுதொடர்பாக ட்ரம்ப் - மெலனியா இருவரும் இதுவரை வாய் திறக்கவில்லை. அதேநேரம் இதை அமெரிக்க ஊடகங்கள் சும்மா விடுவதாய் இல்லை. தற்போது இருவரின் விவாகரத்து தொடர்பாக சட்ட நுணுக்கங்களை பேசத் தொடங்கிவிட்டனர். இப்போது, ட்ரம்ப் - மெலனியாவை பிரிந்தால், அவருக்கு ஜீவனாம்சம் எவ்வளவு கிடைக்கும் என்பதுவரை பேசத் தொடங்கிவிட்டனர். அமெரிக்கத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, இந்தத் தகவல்தான் ஹைலைட்டாக பேசப்படுகிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த சட்ட நிபுணர், பெர்க்மேன் பாட்ஜர் என்பவர் இது தொடர்பாக அளித்துள்ள தகவலில், ``இருவரும் விவாகரத்து பெறுவது என தீர்மானித்துவிட்டால் மெலனியாவுக்கும் டொனால்ட் ட்ரம்பிற்கும் இடையிலான தீர்வு, அவர்களின் 14 வயது மகன் போரானைப் பொறுத்து அமையும். போரானின் முதன்மை பராமரிப்பாளர் யார் என்பது குறித்த கேள்வி எழவில்லை. அதனால் மெலனியாவே முதன்மை பொறுப்பளாராக இருக்க முடியும். அதற்கான உரிமைகள் அவருக்கு கிடைக்கும். என் யூகத்தின்படி இப்படி நடந்தால், மெலனியாவுக்கு 50 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.372.16 கோடி) கிடைக்கும்" என்றார்.
ட்ரம்ப்புக்கு மூன்றாவது மனைவிதான் மெலனியா. இதற்கு முந்தையை இரண்டு திருமணங்களையும் விவாகரத்து செய்துவிட்டார் ட்ரம்ப். இரண்டாவது மனைவி, மார்லா மேப்பிள்ஸை பிரியும்போது, 2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஜீவனாம்சமாக கொடுத்தார் ட்ரம்ப். முதல் மனைவி இவானாவை பிரியும்போது, 14 மில்லியன் அமெரிக்க டாலர், கனெக்டிகட்டில் ஒரு மாளிகை, நியூயார்க்கில் ஒரு அபார்ட்மெண்ட் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.