பிரான்ஸின் பாரிஸ் நகரின் மேற்கு நான்டெர்ரே பகுதியில் தன்னுடைய தாயார் மற்றும் பாட்டியுடன் வசித்து வந்தவர், நஹெல் எம். 17 வயது இளைஞரான இவர் கடந்த ஜூன் 27ஆம் தேதி தன்னுடைய மெர்சிடிஸ் காரில் பயணம் செய்துகொண்டிருந்தபோது, பிரான்ஸ் போலீஸார் அவரைச் சுட்டுக் கொன்றனர். அந்த இளைஞர் போக்குவரத்து விதிகளை மீறியதாக அவர்மீது குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து, அந்நாடு முழுவதும் வன்முறை வெடித்தது. 5 நாட்கள் ஆகியும் ஓயாத வன்முறையால் அந்நாட்டில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. வன்முறை தொடர்பாக இதுவரை 2,500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுவனின் மரணத்தைக் கண்டித்து நடத்தப்பட்ட போராட்டமே வன்முறையாக மாறியது.
நிலைமையைக் கட்டுப்படுத்த தலைநகர் பாரிஸ் புறநகர் பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதுடன், போலீஸாரும் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். இரவு நேரங்களில் போக்குவரத்துச் சேவையும் தடைப்பட்டுள்ளது. அதேநேரத்தில் அந்த இளைஞரின் இறுதிச்சடங்குகள் பெரிய அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியாக நடந்து முடிந்துள்ளன. தற்போதைய நிலவரப்படி அங்கு சற்று வன்முறை குறைந்திருப்பதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன. நஹெல் மரணத்தைத் தொடர்ந்து ஃபிரான்ஸின் பல்வேறு பகுதிகளில் வெடித்த வன்முறை அண்டை நாடான பெல்ஜியத்திற்கும் பரவியது. அங்கும் போலீசார் பலரைக் கைது செய்து வருகின்றனர்.
நஹெல் கொல்லப்பட்டது குறித்து பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், “சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வு மன்னிக்க முடியாதது. துப்பாக்கிச் சூட்டை எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாது” எனத் தெரிவித்துள்ளார். அத்துடன், சிறுவன் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய போலீஸ் மீது கொலைக் குற்றச்சாட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவரும் கைதும் செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தன்று நஹெல் எம், பிரான்ஸின் முக்கியச் சாலையில் காரை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது அங்கு, டிராபிக் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் ஒருவர், அவரது காரை நிறுத்தச் சொல்லியுள்ளார். ஆனால், நஹெல் காரை நிறுத்தாமல் சென்றதாகவும், மேலும் அவர்மீது மோதும் நோக்கில் நஹெல் சென்றதாகவும், அதிலிருந்து தப்பிக்கும் நோக்கில் இளைஞரை நோக்கிச் சுட்டதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அந்த இளைஞர் கார் அருகே சென்று சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் மிரட்டுவதும் பின்னர் சுடுவதும் சிசிடிவி காட்சியில் பதிவாகி இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
சுட்டுக் கொல்லப்பட்ட நஹெல் அல்ஜீரியா நாட்டைச் சேர்ந்தவர் என்றாலும் அவர் வசித்த பகுதியில் மக்களால் விரும்பப்படும் நபராகவும் உள்ளூர் போலீசாரிடமும் நல்ல அறிமுகத்துடனேயே இருந்துள்ளார். படிப்பில் ஆர்வமில்லாத அவர், உணவு டெலிவரி இளைஞராகவும், விளையாட்டு வீரராகவும் இருந்துள்ளார். ரக்பி விளையாட்டில் ஆர்வம் கொண்ட அவர், கடந்த 3 ஆண்டுகளாக Pirates of Nanterre என்ற அணிக்காக விளையாடி வந்துள்ளார்.
மேலும், கற்றல் வசதி இல்லாத குழந்தைகளுக்காக நடத்தப்படும் ஓவல்ஸ் கெயென் அமைப்பிலும் ஓர் அங்கத்தினராக இருந்துள்ளார். அதன்படி எலெக்ட்ரீசியன் படித்து வந்துள்ளார். அவர், போதை மற்றும் இதர குற்றப் பிண்ணனி உள்ளவர் இல்லை என்றும் அவரது நெருங்கிய நண்பர்களும், குடும்ப வழக்கறிஞர்களும் தெரிவித்து உள்ளனர். அதுபோல் ‘நஹெல் யாரையும் கைநீட்டிப் பேசியது இல்லை; வன்முறையில் ஈடுபட்டதும் இல்லை. எல்லோருக்கும் உதவக்கூடியவர்’ என்கின்றனர்.
அதேநேரத்தில், தன் மகனின் சாவுக்கு முக்கியக் காரணம் இனவாதமே என நஹெலின் தாய் கூறியுள்ளார். எனினும், இதை அவரது குடும்ப வழக்கறிஞர் மறுத்துள்ளார். அவர், “இது இனவாதம் பற்றியது அல்ல, நீதிக்கானது” என்று தெரிவித்துள்ளார். மறுபுறம், கடந்த 2021ஆம் ஆண்டு முதல் நஹெல் 5 முறை போலீஸாரின் சோதனைகளுக்கு உட்பட்டிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
போலீசாரின் உத்தரவுக்கு இணங்க மறுத்ததற்காக அவர் கடந்தவார இறுதியில்கூட நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டதுடன், அதற்காக வரும் செப்டம்பர் மாதம் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதுதவிர, ‘தாஜ்’ என்ற போலீஸ் கோப்பில் அவரது பெயர் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இதேபோன்று, கடந்த 2005ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு சம்பவத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டதாகவும், அப்போதும் போராட்டங்கள் வெடித்ததாகச் சொல்லப்படுகிறது.