டோங்கா தீவுக்கு அருகில் உள்ள கடலுக்குள் எரிமலை வெடித்ததையடுத்து, அந்நாடில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பசுபிக் பெருகடலில் அமைந்துள்ள தீவு நாடு டோங்கா. சுமார் ஒரு லட்சம் பேரை மக்கள் தொகையாக கொண்ட இந்நாட்டில் பல்வேறு தீவுகள் உள்ளன. டோங்காவில் கடலில் உள்ள எரிமலை வெடிக்க துவங்கியதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதிய சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால், டோங்கா கடல் பகுதிக்கு அருகில் உள்ள வீடுகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். உயரமான பகுதிகளுக்கு செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதிகாலை சுமார் 3.10 மணியளவில் AEDT எரிமலை தீவான ஹங்கா-டோங்கா-ஹுங்கா-ஹாபாயின் பகுதியில் எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து 20 நிமிடங்களுக்குப் பிறகு தலைநகர் நுகுஅலோபாவில் 1.2 மீட்டர் சுனாமி ஏற்பட்டது. இதனையடுத்து குடியிருப்பு பகுதிகளில் உள்ள தேவாலயங்கள் உள்ளிட்ட கட்டடங்களில் கடல்நீர் புகுந்தது.
சமூக வலைதளங்களில் அலைகள் ஆக்ரோஷத்துடன் பாயும் வீடியோ வைரலாகி வருகிறது. சுனாமி ஆய்வாளர் ஆண்ட்ரூ கிஸ்சிங் கூறுகையில், "மேலும் எரிமலை வெடிப்புகள் நிகழலாம். கடலுக்கு அருகே வீடுகளும், உணவகங்களும், ஹோட்டல்கள் இருப்பது கவலையளிக்கிறது. சுனாமி தாக்க வாய்ப்புள்ளது'' என தெரிவித்துள்ளார்.
அதேபோல், நடுக்கடலில் எரிமலை வெடித்து மேலே புகை,காற்று எழும்புவது போன்ற சாட்டிலைட் புகைப்படங்களும் வெளியாகி வைரலாகி வருகின்றன.